Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதி இந்தியா 149 ரன் குவிப்பு: ஷபாலி 64 ரன் விளாசல்

துபாய்: வங்கதேச அணியுடனான மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நிகர் சுல்தானா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர். மந்தனா 2 ரன் எடுத்து சுல்தானா கதுன் பந்துவீச்சில் ஷோர்னா அக்தர் வசம் பிடிபட, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த பிரதிகா ராவல் 20 ரன் எடுத்து (24 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஷபாலி 64 ரன் (40 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் - ரிச்சா கோஷ் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயன்றது. ரிச்சா 21, தீப்தி 13, பார்தி ஃபுல்மாலி (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது.

ஹர்மான்பிரீத் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் சுல்தானா கதுன் 2, மருபா, நஹிதா, ரபெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.