Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உலகக்கோப்பை இறுதியில் இன்று வேட்டைக்கு தயாராய் இந்தியா வேகம் தணியாத தென்ஆப்ரிக்கா

நவிமும்பை: மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று வலிமை வாய்ந்த தென் ஆப்ரிக்கா மகளிர் அணிக்கு எதிராக, ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி களம் காண உள்ளது. 13வது மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 3வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. மாறாக, வலிமையான அணியாக திகழ்ந்தபோதும் கடைசி கட்டங்களில் சொதப்பும் அணியாக உள்ள தென் ஆப்ரிக்கா அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.

தென் ஆப்ரிக்கா அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொண்டு, சிறிதும் சிரமப்படாமல், 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இறுதிக்கு முன்னேறியது. மாறாக, இந்திய அணியோ, அரை இறுதியில் அசுரத்தனமான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 338 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஜெமிமா ரோட்ரிகஸின் அட்டகாச ஆட்டத்தால் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் உலகில் புதிய உத்வேகம் பிறக்கும். ஆஸி நிர்ணயித்த இமாலய இலக்கை அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி எட்டிப் பிடித்ததால், எதையும் எதிர்கொண்டு சாதிக்கும் அணி என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனங்களில் விதைத்துள்ளது. இந்திய அணி இதற்கு முன் இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளபோதும், சாம்பியன் கனவு நிறைவேறாமல் கானல் நீராகவே இருந்து வருகிறது.

இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தருவதில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் உறுதியாக உள்ளனர். அதேசமயம், இந்திய அணியின் பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் முந்தைய போட்டிகளில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். தென் ஆப்ரிக்கா அணியில், கேப்டன் லாரா உல்வார்ட் அற்புதமான ஃபார்மில் உள்ளார். தவிர மாரிஸான் காப், நாடினி டிகிளெர்க், டாஸ்மின் பிரிட்ஸ், க்ளோ டிரையோன் ஆகியோர் சிறப்பான வகையில் அதிரடி ஆட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். எனவே, இன்றைய போட்டியில் நிச்சயம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

* இறுதியில் களமாடும் வீராங்கனைகள்

இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), உமா சேத்ரி, ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்லீன் தியோல், ஷபாலி வர்மா, அமன்ஜோத் கவுர், தீப்தி சர்மா, ஸ்னேஹ் ரானா, கிரந்தி கவுட், ரேணுகா சிங் தாக்குர், ஸ்ரீசரணி, அருந்ததி ரெட்டி, ராதா யாதவ்.

* தென் ஆப்ரிக்கா: லாரா உல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா (விக்கெட் கீப்பர்), கராபோ மெஸோ, அனெகே பாஷ், நாடினி டிகிளெர்க், அனரீ டெர்க்சென், மாரிஸான் காப், சூனெ லூஸ், நொன்டுமிஸோ சங்காஸே, க்ளோ டிரையோன், அயபோங்கா காகா, மஸபடா க்ளாஸ், நொன்குலுலேகோ எம்லபா, டுமி செகுனே.