Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் ரூ.38,000 கோடி கடன் இலக்கு

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: மகளிர் சுயஉதவி குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில் ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறந்த திறன் வெளிப்படுத்தும் சுயஉதவி குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.38,000 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுயஉதவி குழுக்களுக்கான கடன் மற்றும் மானிய முறைகள் முற்றிலும் கணினிமயமாக்கப்படும். இத்துறைக்கு மொத்தம் ரூ.39,609 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் ரூ.7.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பொது விநியோக திட்டத்தின் கீழ் பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு ரூ.18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மானியத்திற்காக ரூ.14,000 கோடி உள்பட உணவுத் துறைக்கு மொத்தம் ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிங்கப்பெண் படைக்கு ரூ.354 கோடி நிதி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரகால நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு படைக்கு தேவையான கட்டமைப்பு, பயிற்சி மற்றும் உபகரணங்களுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்கவும் நிதி விசாரணைகள் மேற்கொள்ளவும் 65 ‘போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழு’ அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்டங்களுக்கு 37 அலகுகளும், நகர்ப்புறங்களில் 28 அலகுகளும் செயல்படும். மேலும், போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வர உதவி தேவைப்படும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ.70 கோடி நிதியில் பிரத்யேகமாக ‘மறுவாழ்வு நிதி’ உருவாக்கப்படும்.