Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

மகளிர் ஹாக்கி அணி டூர் உறுதியானது: அர்ஜென்டினாவிற்கு எதிராக 4 போட்டியில் ஆடும் இந்தியா

புதுடெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணி, அர்ஜென்டினா சென்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்திய சீனியர் மகளிர் ஹாக்கி அணி, ஏப்ரல் 13 முதல் 17 வரை அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ்அயர்ஸில் இருக்கும் தேசிய உயர் செயல்திறன் தடகள மையத்தில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வரும் 13, 14, 16, 17ம் தேதிகளில் இப்போட்டிகள் நடக்கவுள்ளது. சமீபகாலமாக இந்தியாவும், அர்ஜென்டினாவும் பல விறுவிறுப்பான போட்டிகளில் மோதியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024-25 எப்ஐஎச் ப்ரோ லீக் தொடரில், `ஷூட்-அவுட்’ மூலம் 2-2 என போட்டி சமனில் முடிந்தது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக்கோப்பைக்கும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கும் முன்னதாக, தரமான சர்வதேச அணிகளுக்கு எதிராக விளையாடி பயிற்சி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்திய மகளிர் அணிக்கு இந்த சுற்றுப்பயணம் அமையும். 4 விறுவிறுப்பான போட்டிகளை வழங்குவதோடு, அணியின் பல்வேறு சேர்க்கைகள் மற்றும் உத்திகளை சோதித்து பார்க்க இத்தொடர் உதவுகிறது.

இந்த சுற்றுப்பயணம் குறித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரைன் கூறுகையில், ``நாங்கள் 24 வீராங்கனைகளை கொண்ட அணியுடன் அர்ஜென்டினாவிற்கு பயணிக்கிறோம். இது மிகவும் திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். அதிக எண்ணிக்கையிலான வீராங்கனைகளுக்கு, மிக உயர்ந்த மட்டத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குவதே இந்தச்சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அர்ஜென்டினா உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாகும்.

அந்த போட்டிச்சூழல், ஒவ்வொரு வீராங்கனையும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பற்றி தெளிவுபடுத்தும். மிக முக்கியமான தருணங்களில், யார் முன்வந்து பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அணியில் இடம் பிடிக்க வேண்டுமெனில், முதலில் ஒரு `அணி வீராங்கனையாக’ செயல்படுகிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். தனிப்பட்ட திறமை முக்கியம் தான், ஆனால், உங்களால் அணியுடன் ஒன்றிணைந்து செயல்பட முடியாமலும், சக வீராங்கனைகளுக்காக பரஸ்பரம் உழைக்க முடியாமலும் போனால், அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினமாகிவிடும்’’ என்றார்.