Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழ்நாடு பேரவையை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இதற்கு முன் வழிநடத்திய பெண்கள் யார்!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் அவையில் இல்லாத நேரத்தில், மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவரான சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியுள்ளார். இதன்மூலம், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையை சத்தியபாமா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவையை வழிநடத்தும் தலைவராக சபாநாயகர் இருந்து வருகிறார். சபாநாயகர் இல்லாத சூழலில் துணை சபாநாயகர் அவையை வழிநடத்துவார். அதேபோல், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரும் அவையில் இல்லாதபோது, அவையை நடத்துவதற்காக மாற்று பேரவைத் தலைவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையை வழிநடத்துவதற்காக தற்போது ஆறு பேர் கொண்ட மாற்று பேரவைத் தலைவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தவெகவைச் சேர்ந்த விஜய் சரவணன், சத்தியபாமா, மதார் பகருதீன், திமுகவைச் சேர்ந்த காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், அதிமுகவைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கற்பட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் அவையில் இல்லாதபோது, மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவரான சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சில நிமிடங்கள் அவையை வழிநடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் உறுப்பினர் சத்தியபாமாதான் என்ற தகவல் கவனம் பெற்றுள்ளது.

எனினும், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதற்கு முன்னரும் பெண்கள் பேரவையை வழிநடத்தியுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக, 1937ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ருக்மணி லட்சுமிபதி சென்னை மாகாண சட்டப்பேரவையின் துணை பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். அந்தப் பொறுப்பில் இருந்தபோது அவர் பேரவையை வழிநடத்தியுள்ளார். பின்னர் சென்னை மாகாணத்தின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினரான ஏ.எஸ். பொன்னம்மாள், 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராகப் பதவி வகித்தார். அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும், பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாற்று பேரவைத் தலைவர்கள் பட்டியலிலும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். இதனால், சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேரவையை வழிநடத்திய நிகழ்வு, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.