Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்களுக்குத் தேவை சுயசார்பு பொருளாதாரம்

பெண்களுக்கு சுய பொருளாதார தன்மை மிகவும் அவசியம். அது மட்டுமே எல்லா இடங்களிலும் அவளுக்கான கௌரவத்தையும் மரியாதையையும் பெற்றுத் தரும் என தனித்துவத்துடன் பேசுகிறார் முனைவர் மேகலா சித்திரவேல். நன்கு படித்த பாரம்பரியமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் மேகலா சித்ரவேல். இவரது கணவர் கால்நடை மருத்துவர் சித்ரவேலும் மெத்த படித்தவர். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இவரது மகன், மகளோ மருத்துவர், இருந்தும் எளிமையும் நிதானமுமாக பேசுகிறார் முனைவர் மேகலா சித்ரவேல். பேச்சாளர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர், மெத்த படித்தவர், என்கிற பன்முகத் திறமைகள் பலவற்றைக் கொண்ட இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

முனைவர் பட்டம் பெற்றது குறித்து...

பெண்கள் நிறைய படிக்க வேண்டும் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதனால் எனக்கு நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. நான் மதுரை பாத்திமா கல்லூரியில் அந்தக்கால பியூசி படித்திருந்திருந்தேன். அதன் பிறகு திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்குப்பிறகு எனது கணவரிடம் நான் கேட்ட முதல் வேண்டுகோளே கல்வியினை தொடரவேண்டும் என்பதுதான். கணவர் சித்ரவேல் கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர். எனது கற்றலை பெரிதும் ஊக்குவிக்க தொடங்கினார். என் மகள் வந்தனா பிறந்தபோதுதான் பிஏ படித்தேன். மகன் வெற்றிமாறன் பிறந்த போது எம்ஏ படித்தேன். பிறகு அருகிலிருந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்க துவங்கினேன். பிறகு பிஎட் மற்றும் எம்எட் படித்து முடித்த பிறகு சொந்தமாக பள்ளி ஒன்றை துவங்கி நடத்தி வந்தேன். எனக்கு சிறு வயதிலிருந்தே எம்ஜிஆர் மீது நிறைய அபிமானம் இருந்தது. அவர் குறித்து நிறைய படிப்பேன் எழுதுவேன். அதன் காரணமாகவே முனைவர் படிப்பிற்கான தலைப்பினை தெரிவு செய்தேன். எம்ஜிஆர் திரைப்பட பாடல்களில் சமுதாய மேம்பாட்டு சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து முனைவர் படிப்பை முடித்தேன். என் மகன் வெற்றிமாறன் தான் என்னை ஆர்வமாக பிஎச்டி படிக்க வைத்தார். இதற்கி இடையில் எழுத்துத் துறை மீது கொண்ட ஆர்வத்தால் புத்தகங்களையும் நிறைய எழுதத் துவங்கினேன்.

எழுத்தாளராக உங்களது எழுத்து குறித்து...

முதலில் இரண்டொரு நாவல் மட்டுமே எழுதினேன். அதன் பிறகு தீவிரமாக எழுதத்துவங்கி இதுவரை நிறைய புத்தகங்களை எழுதியுள்ளேன். தமிழில் 62 நாவல்களையும் இதர தலைப்புகளில் 32 நூல்களையும் எழுதியுள்ளேன். எனது நாவல்களை மூன்று மாணவர்கள் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஆய்வு செய்துள்ளனர். பிரபல இதழின் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன். எனது சிறுகதைகள் அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவங்கள் எனலாம்.

உங்களது குடும்பம் குறித்து...

என் மகள் வந்தனா சுயசார்பு பொருளாதாரத்துடன் கௌரவமாக வாழவேண்டும் என விரும்பினேன். அவளும் நன்றாக படித்து மருத்துவராக சாதித்து விட்டார். மருத்துவ சேவை மகத்தான சேவை என்பதும் ஒரு காரணம். எனது மகன் வெற்றிமாறன் கலை இலக்கியத்தின் மீது காதல் கொண்டவன். அவர் விரும்பிய சினிமாத்துறையில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. அவர் லயோலாவில் படித்த போது இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக தனது வாழ்வை துவங்கி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக சாதித்தது எனக்கு கிடைத்த பெரும்பேறு என்பேன்.

படிப்பு தான் வாழ்வினை உயர்த்தும், மாற்றும் தாரக மந்திரம் என்பதே வாழ்வியல் உண்மை. எனவே படிப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். சுயசார்பு பொருளாதாரத்தோடு கௌரவமாக வாழுங்கள் என்பதே நான் உணர்ந்த சொல்லக்கூடிய பெருஞ்செய்தி என்பேன்.

கிடைத்த விருதுகள் மற்றும் பாராட்டுகள்...

எழுத்து மற்றும் சமூகப் பணிகளுக்காக நிறைய பாராட்டுதல்களும் பரிசுகளும் விருதுகளும் கிடைத்தது மகிழ்வான ஒன்று. மேலும் சாதனைபெண்மணி, கல்வி செம்மல்,சேவை செம்மல், சிறந்த எழுத்தாளர் பட்டங்கள் மற்றும் தாகூர் கலா சாகித்ய அகாடமி யின் சிறந்த எழுத்தாளர் விருது போன்ற பல்வேறு கௌரவங்களை பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி வரும் இவரின் தொடர் எழுத்து முயற்சியையும் இவரின் வாழ்க்கை வெற்றியும் அங்கீகரிக்கும் விதமாக கொற்றவை சார்பில் “சிறந்த எழுத்தாளர் விருது” சமீபத்தில் வழங்கப்பட்டது. மேலும் தன் அம்மாவின் விருதுபெறும் விழாவில் சர்ப்ரைஸாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு கல்வி மிக முக்கியம். அதனோடு ஒரு வேலையை தேடிக் கொள்வதும் மிக அவசியமான ஒன்று. பெண்கள் தனது தேவைகளுக்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியங்களில்லை. தனது சுயமான வருமானத்தை ஏற்படுத்தி கொள்வதே அவர்களது வாழ்வினை வளமாக்கும் என சமூக அக்கறையுடன் சொல்கிறார் முனைவர் மேகலா சித்ரவேல்!!!