Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஞானம், வளத்தை அருளட்டும் என தமிழில் டிவிட் சீஷெல்சில் விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு: 3 நாள் பயணம் முடிந்து நாடு திரும்பினார்

விக்டோரியா: சீஷெல்சில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிரதமர் மோடி, ‘கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை, வளத்தை அருளட்டும்’ என தமிழில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று டெல்லி திரும்பினார்.இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான சீஷெல்சுக்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி சென்றார்.

இதில், பிரதமர் மோடிக்கு ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹோரிசோன்’ எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடி-சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் 19 முக்கிய முடிவுகளும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றி, சீஷெல்ஸ் நாட்டிற்கு 2 அதிவேக ரோந்து கப்பல், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, சீஷெல்சின் 50ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நடந்த தேசிய தின பொன் விழா கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கவுரவ விருந்தினராக நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார். இதில் நடந்த ராணுவ அணிவகுப்பில் இந்திய ஆயுதப் படையை சேர்ந்த அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், கடற்படை வீரர்கள், கடற்படை பேண்ட் வாத்திய குழுவினர் பங்கேற்றனர். இந்திய கடற்படை கப்பல்கள் தார்காஷ், இக்ஷாக் ஆகியவை விக்டோரியா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இவை இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில், பயணத்தின் கடைசி மற்றும் 3வது நாளான நேற்று பிரதமர் மோடி அமைதிப் பூங்காவில் மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கிருந்த பக்தர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழில் வெளியிட்ட பதிவில், ‘‘சீஷெல்ஸ் நாட்டில் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம் கட்டுவதற்கும், இந்தியக் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரபலப்படுத்துவதற்கும் செஷல்ஸ் இந்துக் கோவில் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியாவில் உள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். பகவான் ஸ்ரீ கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும்’’ என கூறி உள்ளார். சீஷெல்சில் வசிக்கும் இந்திய வம்சாவளிகளை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். இத்துடன் 3 நாள் அரசு முறை பயணத்தை நிறைவு செய்த மோடி நேற்று பிற்பகல் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.