எல்லா புதுமைகளும், புரட்சிகளும் கண்டுபிடிப்புகளும் ஒரு தீப்பொறியாக மூளையில் தட்டிய சிந்தனை மின்னலில் இருந்து தான் தோன்றின என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.மனதில் திடீரென்று பளிச்சிடும் சிந்தனையைப் பிடித்துக் கொண்டு அதன் திசை நோக்கி வாழ்க்கையை பயணிப்பவர்கள் வெற்றிவாகை சூடி வரலாற்றில் இடம் பிடித்து
விடுகிறார்கள்.
தாமர்லேன் என்ற மன்னன் கதை அனைவருக்கும் தெரியும். அது இதுதான், அவனுக்கு பெருந்தோல்வி ஏற்பட்டது. அவனுடைய படைகள் சிதறி ஓடின.மன்னன் ஒரு குகையில் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன் கண்ணில் பட்டது ஒரு எறும்பு. எறும்பு ஒரு தானியத்தை இழுத்துச் சென்றது. தன்னைவிட கடினமான அந்த தானியம் எறும்பைவிட பெரிதாக இருந்தது. அது வெகுநேரம் அதை விடாமல் இழுத்துச் சென்றது. 69 முறை அது தன் முயற்சியில் தோற்றது.மீண்டும் மீண்டும் முயன்ற படி இருந்தது.
70 வது முறை மதில் சுவற்றில் தானியத்தை நகர்த்துவதில் வெற்றி கண்டது. பார்த்தபடி இருந்தான். தோல்வியால் குலைந்து போயிருந்த அவனுக்குள் ஒரு பொறி தட்டியது. ஒரு எறும்பால் வெற்றி பெற முடியுமானால், வாய்ப்பைக் கட்டுக்குள் கொண்டு
வெற்றியடைய மனிதனாலும் முடியும் என்ற சிந்தனை தோன்றியது. மூலம் போரில் மீண்டும் ஈடுபட்டு வெற்றி கண்டான் மன்னன்.
இராபர்ட் புரூஸ் என்ற மன்னன் கதையிலும் எறும்புக்கு பதில் சிலந்தி ஒன்று வாய்ப்பினை மேற்கொண்டு அறிவை ஏற்படுத்தியது என்பதாக வரும். இதுபோன்ற கதை பள்ளியில் பாடம் பயின்றபோது பலமுறை சொல்லி கேட்பது உண்டு. வாய்ப்பு வெற்றியாகக் கனிய இடைவிடாத முயற்சி வேண்டும் என்பதே இது போன்ற கதைகள் உணர்த்தும் பாடமாகும்.
மரத்தை உலுக்க மன தைரியம் இல்லை எனில் கனி ஏது?கரத்தை உயர்த்த கவனம் இல்லை எனில் உயர்வு ஏது,?உரத்தைச் சேர்க்க உள்ளம் இல்லை எனில் வெற்றி ஏது?திறத்தைக் காட்ட தேர்ந்த வாய்ப்பு இல்லை எனில் மேன்மை ஏது?கரத்தைக் கொடுக்க மற்றொரு கை இல்லை எனில் உறவு ஏது? வரத்தை உண்டாக்கும் வாய்ப்பு இல்லையெனில் சிறப்பு ஏது?
தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் அவர் கண்டுபிடிப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்னரே பிலிப்ஸ் ரெய்ஸ் என்ற ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஒரு கருவியை கண்டுபிடித்தார்.அவரது கருவி ஒரு இடத்திலேயே இருந்து மற்றொரு இடத்திற்கு இசையை கேட்குமாறு செய்தது. பேச்சினை அனுப்பச் சிறிது முயற்சியே தேவைப்பட்டது. ஒரு இடத்திலிருந்து இன்னொருவர் பேசுவதைக் கேட்கும் முயற்சி தொடர்ந்தது.தான் கண்டுபிடித்த கருவியோடு பலரை அணுகினார். ஜெர்மனிக்கார முதலீட்டாளர்கள் அதனால் பயனில்லை என்று கூறினார். ஏற்க மறுத்துனர்.
தந்தி முறையே போதும் என்று எல்லோரும் சொன்னார்கள் விளைவு? ஜெர்மனிக்காரர் முயற்சியை கைவிட நேர்ந்தது. அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ், பெருமை எல்லாம் தொலைபேசியை கண்டுபிடித்த கிரகாம்பெல்லிற்குச் சேர்ந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து இருந்தால் அவரல்லவோ தொலைபேசியின் தந்தை என்று
போற்றப்பட்டிருப்பார்.
வாய்ப்பு கை மாறிப் போவதால் பெருமை,சிறப்பு, புகழ்,கௌரவம், சாதனை எல்லாம் கைமாறி தானே போகும்?
லேங்லி ஸ்மித் சோனியன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.விமானத்தை வடிவமைத்தார். அமெரிக்க அரசு பெருந்தொகையை மானியமாக தந்தது. பல விஞ்ஞானிகள் முன்னிலையில் பறக்கும் ஊர்தியை ஓட்டிக்காட்ட தேதி குறித்தார். எல்லோரும் ஆவலோடு குழுமி இருந்தனர். லேங்லி வடிவமைத்தது வானில் பறக்கவில்லை. சோகத்தில் மூழ்கினார். பத்திரிகைகள் அவரை கண்டித்தனர். 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்து வெற்றி கண்டனர். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்னர் தான் லேங்லி தோல்வியை தழுவினார்.வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் உலகமே ரைட் சகோதரர்களை கொண்டாடியது. ரைட் சகோதரர்களுக்கு வாய்த்த வாய்ப்பு வெற்றி கண்டது.
ரைட் சகோதரர்கள் மிதிவண்டியை பழுது பார்ப்பவர்களாகவே இருந்தனர். அவர்களை உலகம் அறியாது. பல்கலைக்கழக கல்வி கிடையாது. ஆனால் ஆகாய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் வென்றனர்.
சாமுவேல் லேங்லி மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய கணித பேராசிரியராக இருந்தவர். நல்ல சிந்தனையாளராக அறிவியல் வல்லுனராக இருந்தவர். வானியலிலும் தேர்ந்த பேராசிரியராக இருந்தவர். ஏரோடைனமிக்ஸ் என்ற வான்வழி பறக்கும் கலையை ஆழ்ந்து படித்தவர்.1890 வரை பல சோதனை முயற்சிகளில் ஈடுபட்டவர். ஆளில்லாமல் தானே பறக்கும் கருவியை கண்டுபிடித்த ஒருவராக விளங்கினார். 1898ல் அமெரிக்க ராணுவத்துறையை அணுகி மனிதன் அமர்ந்து பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கிறேன் என்றே கூறினார். அமெரிக்க ராணுவத்துறை 50,000 டாலர்களை உதவி தொகையாக வழங்கியது.ஆனால் லேங்லியிற்கு கிடைக்க வேண்டிய புகழ் ரைட் சகோதரர்களுக்கு கிடைத்தது.இதுபோன்றுதான் இந்த உலகத்தில் யாரெல்லாம் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதிப்பதில் முந்திக் கொள்கிறார்களோ அவர்களை இந்த உலகம் அங்கீகரிக்கிறது.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியையும் சொல்லலாம். டென்மார்க் அரசு குடும்பத்தில் பிறந்த
இளவரசி ஒருவர் நாட்டின் ராணுவப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சியும் முடித்திருக்கிறார். உலகில் ராணுவ பயிற்சியில் சேர்ந்த முதல் இளவரசி என்ற
பெருமையை பெற்றுள்ளார்.
டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா ராணுவத்தில் இணைந்து தன்னுடைய ராணுவ சேவையை
அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.
டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார்.இந்த நிலையில் அவர்,டென்மார்க்கில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தில் சேர்ந்து உள்ளார்.
ஸ்லாகெல்சில் உள்ள கார்ட் ஹுசார் ரெஜிமென்ட் பிரிவில் பணியில் சேர்ந்து தனது ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளார். பெண்களையும் உள்ளடக்கிய மற்றும் நீண்ட காலப் பயிற்சியைக் கொண்ட டென்மார்க்கின் விரிவுப்படுத்தப்பட்ட தேசிய சேவை அமைப்பின் கீழ் பணியாற்றும் முதல் குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இதன் மூலம் இளவரசி இசபெல்லா அரச குடும்பத்திலிருந்து முழுமையான கட்டாய ராணுவ சேவைக்கு உட்படும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார்.
இசபெல்லாவின் மூத்த சகோதரரான பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன் இந்த ராணுவ முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்தார். அவர் தற்போது 2-ம் லெப்டினன்டாகப் பயிற்சி பெற்று
வருகிறார்.
டென்மார்க் அரச குடும்பத்தில் ராணுவ சேவை என்பது பாரம்பரியமாக கடைபிடித்து வந்தாலும், புதிதாக விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் ராணுவ சேவையை நிறைவு செய்யும் முதல் அரச குடும்ப பெண் என்ற பெருமையை இளவரசி இசபெல்லா பெற்றுள்ளார்.
டென்மார்க் மன்னர் பிரடெரிக் - ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா, தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஆகஸ்ட் 2026-ல் ஸ்லாகெல்சில் உள்ள புகழ்பெற்ற ‘கார்ட் ஹுசார்’ (Guard Hussar Regiment) ராணுவப் பிரிவில்
சேர்ந்தார்.
ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு டென்மார்க்கில் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தில் அவர் இணைந்துள்ளார். பெண்களுக்கும் இத்திட்டம் தற்போது பொதுவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண ராணுவ வீரரைப் போலவே பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளவரசி இசபெல்லா, இந்த சேவைக்காக அரசு வழங்கும் சம்பளம் மற்றும் படிகளை வாங்க மறுத்துவிட்டதாக டென்மார்க் அரச மாளிகை அறிவித்துள்ளது. இவருக்கான செலவுகளை அரச குடும்பமே ஏற்கிறது. இளம் வயதில் ராணுவத்தில் இணைந்து நாட்டிற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையே சாதனையாக மாறியது என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு
உணர்த்தும் பாடமாகும்.
ஒரு சிறிய புள்ளியாய் துள்ளியெழும் சிந்தனை... எல்லா மாற்றங்களையும் நிகழ்த்தும் அற்புத சக்தி மிக்கது.நெஞ்சில் அலைமோதும் சிந்தனைகளைஒருங்கமைத்துக் கூர்மையாக்கினால் சாதனைகளை புரிய முடியும்.எனவே சிந்தனையே வெற்றியின் மூலதனம், ஆகவே எல்லையற்ற ஆற்றல் மிக்க சிந்தனையின் வழியாக எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புங்கள்.ஆகவே சிந்தனை என்ற சிறகை விரியுங்கள், உங்களாலும் சாதிக்க முடியும்.


