Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் நம்பர் 1 சபலெங்கா

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை அரினா சபலெங்கா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் உடன் மோதிய சபலெங்கா 6-1 என முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், 2வது செட்டில் கெஸ்லர் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்த சபலெங்கா 6-1, 7-6 (11-9) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 39 நிமிடத்துக்கு நடந்தது.  ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா தனது 2வது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் அனஸ்டேசியா காசனோவாவை (ரஷ்யா) வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), கரோலினா முச்சோவா (செக் குடியரசு), கிளேர் லியு (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷ்யா), ஜெலனா ஓஸ்டபென்கோ (லாட்வியா) ஆகியோரும் 3வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைல்டு கார்டு சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் களமிறங்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (44 வயது, அமெரிக்கா) 3-6, 7-6 (8-6), 3-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயின்ட்டிடம் போராடித் தோற்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த போட்டியின்போது செரீனா வலது முழங்கால் மூட்டில் காயமடைந்தாலும், சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து இரட்டையர் பிரிவிலும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* 3வது சுற்றில் ஹர்காக்ஸ்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று களமிறங்கிய போலந்து நட்சத்திரம் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (10-8), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செபாஸ்டியன் ஆஃப்னரை (ஆஸ்திரியா) வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். டாமி பவுல் (அமெரிக்கா), மார்டன் புக்சோவிக்ஸ் (ஹங்கேரி), ஜென்சன் புரூக்ஸ்பி (யுஎஸ்), டேவிடோவிச் ஃபோகினா (ஸ்பெயின்), அலெக்ஸ் மோல்கன் (ஸ்லோவகியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, ஆஸி.நட்சத்திரம் தனாசி கோக்கினாகிஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டனர்.