Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மவுனம் உடையுமா?

முதல்வர் விஜய் பதவியேற்று 75 நாட்கள் கடந்து விட்டது. இதில் அரசின் சாதனைகள் என்ன என்பதை பட்டியலிடுவதற்கு நீண்ட நெடிய தேடுதல் அவசியம். அதே நேரத்தில் தொடரும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இதில் முதலிடம் வகிப்பது, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் துஷ்பிரயோகத்தால் நிகழும் லாக்கப் மரணங்கள். கடந்த 13ம் தேதி, நாகர்கோயிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் லாக்கப் மரணம், மாநிலத்தையே உலுக்கியது.

இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், கடந்த 23ம் தேதி தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கூறி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயது இளைஞர் அருணாசலம், போலீசார் தாக்கியதில் இறந்துள்ளார். இதுவும் காவல் துறையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 15ம் தேதி, சென்னை புழல்சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த 45 வயது கைதி பாலாஜி உயிரிழந்துள்ளார். அதற்கும் முன்பாக 8ம் தேதி, சென்னையை சேர்ந்த 28 வயது ஓட்டுநர் வெங்கடேசன், காவல்துறையின் சித்ரவதையால் உயிரிழந்துள்ளார்.

இப்படி ஒரே மாதத்தில், மாநிலத்தையே அதிர வைத்த 4 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத ஒரு அவல நிகழ்வாகவே இது கருதப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகள், மக்கள் மன்றத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, லாக்கப் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்தவர் தற்போதைய முதல்வர் விஜய். ஆனால், தனது ஆட்சியில் நடந்துள்ள இந்த நான்கு மரணங்கள் குறித்தும், இதுவரை அவர் வாய் திறக்கவில்லை.

எங்கள் ஆட்சி அமைந்தால், காவல் நிலைய அத்துமீறல்கள் அறவே இருக்காது. காவல் துறை முழுமையாக சீர்திருத்தப்படும் என்று அவர் பொங்கியது, இப்போது ஏன் முடங்கி நிற்கிறது என்ற கேள்வி, அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் இயல்பாகவே எழுந்துள்ளது. அதே நேரத்தில், இந்த லாக்கப் மரணங்கள் தொடர்பாக, முதல்வரிடமிருந்து இதுவரை ஒரு அறிக்கை கூட வரவில்லை. முதல்வரின் இந்த மவுனம், லாக்கப் மரணத்தை விட வேதனையானது என்பது உயிரிழந்தவர்களின் உறவுகள் வெளிப்படுத்தும் உள்ளக்குமுறல்.

லாக்கப் மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திய பலர், இன்று எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சட்டமன்றத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் காதுகளில் கூட, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஓலக்குரல் கேட்காதது காலக்கொடுமை. இதற்கு காரணம் காட்டி, கீழ்மட்ட அதிகாரிகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் பழைய பார்முலாவை பின்பற்றுவதற்கு, நீங்கள் போட்ட மாற்றம் என்ற முழக்கம் தேவையே இல்லை.

அந்த மாற்றம் என்பது, லாக்கப் மரணம் தொடர்பான நடவடிக்ைகளிலும் தென்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக, ‘‘அதிகாரத்தின் நிழலில் நடக்கும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, ஒரு முதல்வரின் உண்மையான நிர்வாகத் திறனுக்கு சான்று. தேர்தல் களத்தில் வெற்றிக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது எளிது. அப்படி வெற்றி பெற்ற நிலையில், செயல்பாட்டில் அதை காட்ட வேண்டியது காலத்தின் அவசியம். இதை இனியேனும் கவனத்தில் வைத்து செயல்படுவாரா மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்? அவரது மவுனம் உடையுமா? என்பதே மக்கள் மன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.