தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆக.19ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பால்கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதாவது, கொள்முதல் விலை ரூ.38ல் இருந்து ரூ.41 ஆக அதிகரிக்கப்படும் என கூறினார். ஆனால், இதனை பால் உற்பத்தியாளர்கள் ஏற்கவில்லை. காரணம், சட்டமன்றத் தேர்தலின்போது, தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் பால் லிட்டருக்கு ரூ.44 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் வாக்குறுதியின்படி விலை உயர்வு வழங்கப்படாதது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காக பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிபட்ட பாலை மிகுந்த வலியுடனும், வேதனையுடன் தரையில் ஊற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்கு சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து தவெக அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்து தான் வருகிறது. அதன் வெளிப்பாடு தான் தற்போதைய கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பு. பசுந்தீவனம் அடர் தீவனம் உள்ளிட்ட மாட்டு தீவனங்களும் ஆட்கள் கூலியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அப்படியிருக்கையில், மாட்டுப் பாலுக்கு லிட்டருக்கு ரூ.50, எருமை பாலுக்கு லிட்டர் ரூ.70 வழங்கினால் மட்டுமே கட்டுப்படியாக கூடிய சூழல் நிலவி வருகிறது. ஆனால், விவசாயிகள் ரூ.48ஐ தான் கேட்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு சராசரியாக ரூ.50 வழங்கப்படுகிறது. மத்தியபிரதேசத்தில் ரூ.62, பஞ்சாப்பில் ரூ.65 வழங்கப்படுகிறது.
இப்படி இருக்க, லிட்டருக்கு ரூ.41 வழங்கிவிட்டு தவெக அரசு, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்ததாக நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல், விவசாயிகளை மேலும் நெருக்கடிக்கு தான் ஆளாக்கியிருக்கிறது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதும் தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களின் விலையும் உயர்த்தப்படுவதால், விவசாயிகளுக்கு விலை உயர்வின் முழு பலனை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கனவே, மதுரையில் ஆவின் பாலில் குளோரின் வாடை அடித்ததும், அதனால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் மக்கள் பலர் தனியார் பாலை வாங்கத் துவங்கி விட்டனர். இதனால் ஆவின் பால் விற்பனை சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஒன்று தவெக அறிவித்தபடி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், இல்லையென்றால் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை நட்டாற்றில் விட்டதுபோல், இப்போதும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது தவெக அரசு. தனியார் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை அதிகமாக வழங்கி வருவதால் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு சென்று விட்டனர். இதனால், தற்போதே ஆவினுக்கு பால் வரத்து சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த சூழலில், அரசு பால் கொள்முதல் விலை உயர்வில் மறுபரிசீலனை செய்யாத பட்சத்தில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அடுத்தக்கட்ட போராட்டத்தை கையில் எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.



