‘‘கழுதை வாலை வெட்டுனது பரபரப்பாகி இருக்காமே..என்னா விஷயம்..’’ என ஆர்வமாகக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘எலக்ஷன் வந்துட்டாலே சீட்டு வாங்க போட்டி அதிகமாகிடும். அதுவும் சொந்தகட்சியில கூட, குழிபறிச்சு சீட்டு வாங்குவாங்க. அப்படி அரசியல் நிலவரம் இருக்குது. இந்த நிலையிலத்தான் வெயிலூர் மாவட்டம் பேரத்துல தொடங்கி பட்டுல முடியுற ஏரியாவுல கழுதைங்களோட வால்கள வெட்டி எடுத்திட்டு போயிருக்குறாங்க. பொதுவாக கழுதை வால் முடிய வெச்சி தாயத்து செஞ்சிபோட்டுக்கிட்டா அதிர்ஷ்டம்னு சொல்லியிருக்குறாங்க. சிலபேரு மாந்திரீகம் செய்றதுக்கும் கழுதை வால்களை பயன்படுத்துறாங்களாம்.
இந்த நிலையில பட்டுனு முடியுற ஏரியாவுல 10 நாளைக்கு முன்னாடி 3 கழுதைகளோட வால்கள மர்ம ஆசாமிங்க வெட்டியெடுத்துட்டிருக்காங்க. எலக்ஷன் வர்றதுனால, சீட்டு வாங்கி ெஜயிக்குறதுக்கு யாராவது கழுதை வாலை வெட்டுனாங்களானு பரபரப்பு பரவி வருது. இந்த சம்பவத்துக்கு முன்னாடி அதே ஏரியாவுல மண்டை ஓடு ஒன்ன வெச்சிருக்காங்க. அதைத்தொடர்ந்து கழுதை வால் சம்பவம் நடக்கவே, இது எலக்ஷனுக்காக செஞ்சதா இல்ல வேற எதுக்கு செஞ்சதான்னு பரபரப்பு விசாரணை போய்கிட்டிருக்குதாம். தேர்தலுக்காக மாந்திரீக வேலையெல்லாம் நடக்குது போல..’’ என கூறி சிரித்தார் விக்கியானந்தா.
‘‘டெல்லி விசாரணைக்கு என்ன காரணமாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சினிமாவில் சிஎம் ஆவதைபோல நிஜத்திலும் ஆயிடலாமுன்னு கட்சியை தொடங்கினாரு அந்த நடிகரு.. கண்ணை திறந்தால் எல்லாம் முடிந்துவிடும் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு கரூர் சம்பவம் பெரும் பாடத்தை சொல்லியிருக்காம்... தன்னை நம்பி வரும் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்தவேண்டும் என்பது கூட தெரியாமல், இரவு 7 மணிக்கு கரூர் வருவதாக அறிவித்துவிட்டு பகல் 12 மணிக்கே வருவதாக ஒரு பொய்யான தகவலை ரசிகர்களுக்கு பரப்பியிருக்காரு.. இதனால கூட்டத்துக்கு முன்கூட்டியே வந்ததோடு, சாப்பாட்டுக்கு கையில் காசில்லாமல் தவித்திருந்த 41 தொண்டர்கள் உயிரைவிட இந்த நடிகர் தான் காரணமுன்னு ஊரே சொல்றாங்க..
இவ்வளவு பெரிய துக்கம் நடந்ததை கேள்விப்பட்ட தமிழ்நாட்டின் முதல்வரோ, இரவோடு இரவாக ஓடிசென்று, மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையையும் அறிவிச்சி அமைதிப்படுத்தியிருக்காரு.. அந்த சோக சம்பவத்தை அரசியல் ஆக்காமல் அமைதியான விசாரணைக்கு உத்தரவு போட்டதுடன் அந்த நடிகர் மீது ஒரு குற்றத்தை கூட சொல்லாம போயிருக்காரு.. ஆனால் அந்த நடிகரோ, சிஎம் சார்.. நான் ஆபீசுலத்தான் இருக்கேன்னு கூக்குரலிட்டு இப்போது ஆப்பசைத்த குரங்காக மாறியிருக்காராம்... சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்ட அந்த நடிகரை விசாரணைக்காக டெல்லிக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க.. தமிழ்நாட்டில் கூட அந்த சிபிஐ அலுவலகம் அழகா இருக்குதாம்.. அதைவிடுத்து டெல்லிக்கு கொண்டுபோனது ஏன் என்ற விவரமும் வெளியே கசிஞ்சியிருக்கு..
சம்பவம் நடந்த இடம் தமிழ்நாடு.. சிபிஐ அலுவலகம் இருக்கும் இடமும் தமிழ்நாடு.. ஆனால் அவரை டெல்லிக்கு வரவழைத்தது இனிமா கொடுக்கத்தானாம்.. இங்கு வைத்து விசாரித்தால் பெரும் பலத்தோடும், சினிமா இறுமாப்போடும் இருப்பாரு.. டெல்லிக்கு கொண்டு செல்வதன் மூலம் அவரது பலத்தை இழக்க வைக்கத்தானாம்.. அங்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் அவரது பலத்தை குறைச்சியிருக்கு... குறிப்பாக அரசியலில் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியதாம்..
கரூரில் நடந்த சம்பவம் ஊருக்கே தெரிந்திருந்தாலும் எல்லா கேள்வியும் அப்படியேத்தான் இருந்ததாம்.. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவரது தேர்தல் முடிவை சொல்லத்தான் அடுத்த விசாரணையை நீண்ட நாள் தள்ளிவச்சியிருக்காங்களாம்.. அதற்குள் அவர் கூட்டணிக்கு கையெழுத்து போட்டால் விசாரணை ரொம்பவே சுமுகமாக போகுமாம்.. இல்லை என்றால் திகாருக்கு அழைச்சிக்கிட்டு போக வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் சொல்றாங்க..
ஆனால் எங்கள் தலைவர் மீது கை வச்சிப்பாக்கட்டும் என அவரது ரசிக தொண்டர்கள் சவால் விடுறாங்களாம்.. ஆனால் அவரது நிலைதான் ஆப்பசைத்த கதையா இருக்குதாம்.. சத்தம் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் வழக்கு சுமுகமாக இருந்திருக்குமே என்ற எண்ணம் அவரது அடிமனதில் எழுந்திருக்காம்... சிபிஐ விசாரணையை கேட்ட ஆளைதேடிக்கிட்டிருக்காராம் அந்த நடிகர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரேஷன் கார்டுல அப்படி என்ன குழப்படி..’’ என சந்தேகத் தொனியோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்க் கடவுள் முருகன் குடியிருக்கும் 2ம் படை வீட்டில் அதிகாரிகள் செய்த அப்பட்டமான தவறை அந்த ஊர் முருகனே மன்னிக்க மாட்டார் என்கிறார்களாம் உண்மையான அதிகாரிகள். அதாவது, அந்த தாலுகாவிற்கு உட்பட்ட குறிச்சியில் முடியும் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், இறந்து போன தனது தாயின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கக்கோரி மனு அளித்தாராம்.
ஆனால் சம்பந்தப்பட்ட வட்ட அதிகாரி இறந்து போனவரை நீக்காமல், ஒட்டுமொத்த குடும்பத்தில் உள்ள கணவர், மனைவி, பட்டப்படிப்பு படித்து வரும் மகன், கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மகள் என 4 பேரையும் நீக்கி அந்த குடும்பத்தையே தெருவில் நிற்க வைத்து விட்டாராம். ஆனால் இறந்தவர் பெயர் மட்டும் ரேஷன் கார்டில் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கிறதாம். அது மட்டுமல்லாது அவர்கள் 4 பேரின் ஆதார் கார்டையும் முடக்கி விட்டாராம் அந்த பலே வட்ட அதிகாரி. இதற்கு என்ன ஆதாரம் இருந்தது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
இது தெரிய வந்த அந்த ஓட்டுநர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த வட்டத்திற்கு தலைமை அதிகாரியை சந்தித்து முறையிட்டாராம். அந்த அதிகாரி இந்த மனுவின் தீவிரம் தெரியாமல் ‘பாலகனை’ போல பேசினாராம். அதற்கு பிறகு வந்த தங்கமான அதிகாரியும் சென்னை என இழுத்தடித்தாராம். ரேஷன் கார்டில் பெயரையும் நீக்கி, ஆதார் கார்டையும் முடக்கிய அந்த அதிகாரி மீதும், மேல் முறையீடு மனு மீதும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்ட வருவாய் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையாம். அந்த ஓட்டுநருக்கும் தீர்வு கிடைக்கவில்லையாம். இதனால் மனித உரிமை ஆணையத்தை நாட ஓட்டுநர் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது விஷயம் கலெக்டர் காதுக்கு எட்ட, இப்படியும் அதிகாரிகள் இருக்காங்களா என வியப்போடு கேட்டாராம். இது, தான் இளம் வயதில் பட்ட கஷ்டத்தை விட்ட கொடுமையாச்சே என எண்ணிய கலெக்டர், அத்தனை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதுடன் நடவடிக்கை நிச்சயம் பாயும் என்றாராம். இதனால் தவறு செய்த வட்டம், கண்டு கொள்ளாத மணியானவர்கள் என அனைவரும் நடவடிக்கைக்கு ஆளாகப் போகிறார்களாம். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத் தானே ஆகனும்..’’ என்றார் விக்கியானந்தா.


