ஒன்றிய பாஜ அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது தேசிய கல்வி கொள்கை 2020-ன் (NEP 2020) கீழ், நாடு முழுவதும் 14,500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளிகளாக மேம்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டமாகும். 2022 செப்டம்பர் 7-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2022-23 முதல் 2026-27 வரை, 5 ஆண்டுகளுக்கு ரூ. 27,360 கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கட்டாயம் இந்தி மொழி படிக்க வேண்டும் என உத்தரவு போடுவதுதான் முரண்பட்ட விவாதத்தை எழுப்புகிறது. அந்த மாணவன் மூன்றாவது மொழியை தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்ற உரிமை இங்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான், முந்தைய திமுக அரசு கடுமையாக எதிர்த்தது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து செயல்படுத்தும் இத்திட்டத்துக்கு, ஒன்றிய அரசு 60 சதவீத நிதியை மட்டுமே செலவிடும். 40 சதவீத நிதியை இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் செலவிட வேண்டும். அதன்படி, பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு 2022-23 முதல் 2026-27 வரை முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.27,360 கோடி நிதியில், ரூ.18,128 கோடியை மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.
மாநில அரசிடம் 40 சதவீதம் நிதியை பெற்றுக்கொண்டு, பி.எம்.ஸ்ரீ என பெயர் வைத்துக்கொண்டு, இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற உத்தரவை, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஏற்கவில்லை. பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இந்தியை திணிக்கும் இந்த திட்டத்தை ஏற்க முடியாது என முந்தைய திமுக அரசு அறிவித்தின் காரணமாக, தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஏறத்தாழ ரூ.3,500 கோடி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்தது.
இந்த சூழலில், தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்து, புதிய அரசு அமைய இருப்பதால், இதை பயன்படுத்திக்கொண்டு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வேண்டும் என ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி, மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளது. இதை, தமிழ்நாடு அரசு ஏற்றால், ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டியது வரும்.
இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், இந்திய மொழி ஒன்றையும் கற்க வேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாக இருப்பதால், இது, பெரும்பாலும் சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக இருமொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டுமே கடைப்பிடித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு என்பதால், மும்மொழி கொள்கையை எதிர்த்து வருகிறது.
தமிழ்மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் ஆபத்து விளைவிப்பதுடன், மாநில அரசின் உரிமையை பறிக்க துடிக்கும் ஒன்றிய பாஜ அரசின் மும்மொழி கொள்கை திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அரசின் தெளிவான நிலைப்பாடு. வெறும் அறிவிப்போடு மட்டும் நிற்காமல், அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவும் இருந்தது. ஒன்றிய அரசு எத்தனையோ மிரட்டல், மாயாஜால வேலைகளை காட்டியபோதும், திமுக அரசு பணியவில்லை. தற்போது, இப்புதிய சவால், புதிதாக வர உள்ள அரசு முன் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அரசு பணியுமா அல்லது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போல் துணிந்து எதிர்ப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
