Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரவாதம் தருமா?

பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் பதவிகளை பறிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்ற குழு ஆராய்ந்து வருகிறது. கடந்தாண்டு இதுதொடர்பான அரசியலமைப்பு மசோதா (130வது திருத்தம்) மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து 31 உறுப்பினர்களை கொண்ட கூட்டுக்காவல் குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டக்குழு மாநில அரசுகள் மற்றும் சம்மந்தப்பட்ட பல்வேறு துறைகளுடன் கலந்துரையாடியது. இதன் தொடர்ச்சியாக வரும் 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் மட்டுமே எம்எல்ஏ அல்லது எம்.பி. பதவி பறிபோகும். ஆனால் இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, ஒருவர் கைது செய்யப்பட்டு பிணை (பெயில்) கிடைக்காமல் 30 நாட்கள் காவலில் இருந்தாலும் பதவி பறிபோகும் என்ற விதி ேசர்க்கப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக ஒன்றிய அமைச்சர், முதலமைச்சர் அல்லது இணை அமைச்சர் கைது செய்யப்படலாம். அவ்வாறு கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ச்சியாக காவலில் வைக்கப்பட்டால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

ஒன்றிய அமைச்சராக இருந்தால் பிரதமர் வழங்கும் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மாநில அமைச்சர்களை பொறுத்தவரை ஆளுநர், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் செயல்படுவார். இந்த ஆலோசனை அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட 31வது நாளுக்குள் வழங்கப்பட வேண்டும். பிரதமரோ, முதல்வரோ எந்த ஆலோசனையும் வழங்காவிட்டாலும், அந்த அமைச்சர் 31வது நாளில் தானாகவே, தனது பதவியை இழப்பார் என்பது தான் புதிய சட்டதிருத்தம் சொல்லும் சாராம்சம்.

உச்சபட்ச பதவிகளில் இருப்பவர்கள், தண்டனை பெற்றால் பாயும் இந்த நடவடிக்கை என்பது சிறந்தது தானே? என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழும். ஆனால் இது மாநில அரசுகளை பணிய வைப்பதற்காக ஒன்றிய அரசு எடுத்துள்ள ஒரு ஆயுதம் என்கின்றனர் சட்டம் சார்ந்த அரசியல் நோக்கர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். அதேநேரத்தில் பழிவாங்கும் நோக்கத்திற்காக ஒருவர் மீது பொய் புகார்கள் கூறப்படும் போது தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். இதுதான் சட்டத்தின் நியதி.

ஆனால் தற்போதைய ஒன்றிய அரசானது சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் போன்றவற்றை தனது கைப்பாவையாக வைத்துக் கொண்டு எதிர்கட்சிகளை வேட்டையாடி வருகிறது என்பது கண்கூடாகி நிற்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான், இந்த சட்டத்திருத்தத்தால் துஷ்பிரயோகம் அதிகளவில் நிகழும் என்பது அவர்களின் கூற்று. எனவே இந்த புதிய சட்டதிருத்தத்தால், அரசியல் பழிவாங்கல் நடவடிக்ைககள் எதுவும் நிகழாது என்ற உத்தரவாதத்தை தருமா ஒன்றிய அரசு என்பதே மில்லியன் டாலர் கேள்வி.