கோவையில் காலில் கம்பி குத்திய காயத்திற்கு சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்பட்ட காட்டுயானை திடீர் சாவு ஏன்?
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் காலில் கம்பி குத்திய காயத்திற்கு சிகிச்சை அளித்து பின்னர் வனத்தில் விடுவிக்கப்பட்ட யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு உளியூர் சுற்றுப்பிரிவு பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை இரும்பு கம்பியில் சிக்கி காலில் காயத்துடன் அவதிப்பட்டது. இதனை கடந்த 2ம் தேதி வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது கண்டறிந்தனர். தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரகர் தினேஷ், வனக்கால்நடை மருத்துவர்கள் தலைமையில் 60 பேர் கொண்ட வனப்பணியாளர்கள் குழு தொடர்ந்து சில தினங்கள் அதனை டிரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து வந்தனர்.
கடந்த 6 ம் தேதி சமதள பகுதிக்கு வந்தவுடன் வனக்கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் காலில் காயம் பட்ட யானைக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, பழங்களில் காலில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தும் மருந்துகளை வைத்தும், ஓஆர்எஸ் கரைசல், குளுக்கோஸ் உள்ளிட்டவை தரப்பட்டது. இதில் யானையின் உடல் நலம் தேறியதை அடுத்து சிறுமுகை காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர். அந்த யானையை கடந்த சில தினங்களாக சிறுமுகை வனச்சரகர் தினேஷ் தலைமையில் 5 குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த யானை தென்படவில்லை. வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட யானை நேற்று தாமரைப்பாலி என்ற இடத்தில் புதர் மறைவில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த யானைக்கு இன்று உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கலாம் நோய்த்தொற்று உடலில் பரவி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வருவதாகவும் பிரேத பரிசோதனை முடிவில் யானையின் இறப்புக்கு காரணம் முழுமையாக தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.