Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கொடைக்கானலில் வாகனங்களை சேதப்படுத்திய காட்டுமாடுகள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்றிரவு காட்டுமாடுகள் கூட்டமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு மாடுகள் ஏறி இறங்கியதில் கார் உள்ளிட்ட 2 வாகனங்கள் சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு நிலவி வரும் குளுகுளு தட்பவெப்ப நிலையை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு மாடுகள், சுற்றுலா தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு மாடுகள், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அண்ணாசாலை பகுதியில் கூட்டமாக புகுந்தன. இதில் ஒருசில காட்டு மாடுகள் அங்குமிங்கும் ஓடின. இதில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஒன்று கீழே விழுந்து சேதமடைந்தது. இதேபோல் அந்தோணியார் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது காட்டு மாடு ஒன்று ஏறி ஓடியது. இதில் காரின் மேற்கூரை, பின்பக்க கண்ணாடி உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன.

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, நகருக்குள் உலா வரும் காட்டு மாடுகளை தடுத்து, அடர்ந்து வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர். மேலும் சேதமடைந்த வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.