இரவு முழுவதும் காவல் காத்தாலும் காலையில் வயலில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள குனில்வயல் பகுதியில் இரவு முழுவதும் காவல் காத்தாலும் காலை நேரத்தில் வயலில் புகுந்து நெல் பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையால் அப்பகுதி விவசாயிகள் அதிருப்தியும், சோகமும் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்று வட்டார பகுதிகளான குனில்வயல், மொளப்பள்ளி, இருவயல், புத்தூர் வயல், வடவ வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் காட்டு விலங்குகளிடமிருந்து நெற்பயிர்களை பாதுகாக்க இரவு நேரத்தில் விழித்திருந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் காவல் பணியில் ஈடுபட்டாலும் அதிகாலை நேரத்தில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. விவசாயம் செய்து மாதக்கணக்கில் காத்திருந்து இரவு நேரத்தில் கண்விழித்து கஷ்டப்பட்டாலும் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அருகில் உள்ள முதுமலை வனப்பகுதியில் இருந்து அகழிகளை கடந்து வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த அகழிகளை சீரமைத்து மின்வேலி அமைத்து பாதுகாப்பு தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யானைகளை கண்காணித்து விரட்ட வனத்துறையினர் இரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் வனத்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் போக்கு காட்டி யானைகள் வயல்களில் புகுந்து விடுகின்றன. தொடர்ச்சியாக ஊருக்குள் வந்த பழகி விட்ட காட்டு யானைகளை நிரந்தரமாக ஊருக்குள் வராமல் தடுக்க போதிய நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும், யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.