Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூங்கா நகரில் இலைக்கட்சி ஆட்டம் கண்டிருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘போலி மருந்து கைமாறியது சரியான முடிவுதான்னு யூனியன் நிர்வாகிக்கு பாராட்டு மழையா இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிகத்துக்கு பெயர்போன யூனியனில் நடந்த போலி மருந்து மோசடிகள் சிபிஐ வசம் கைமாற ஆளும்தரப்போ கலக்கத்தில் இருக்கிறதாம்.. ஓரிரு நாளில் இதற்கான அதிகாரிகள் யூனியனுக்கு வந்து கோப்பை பெறுவதோடு, ஒவ்வொருவருக்கும் தனித்தனி நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க தயாராகி வருகிறார்களாம்.. நிலைமை இப்படியிருக்க, தற்போது புதுவருட பூதாகரமாக, இந்த போலி மருந்துகள் நாடுவிட்டு நாடு கடத்தப்பட்ட பகீர் தகவலும் கசிய தொடங்கி உள்ளதாம்.. விந்தையான சங்கிலி மோசடிக்கு வெளிநாடு வாழ் இந்தியர் சிலரும் துணை போயிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அடுத்தகட்ட சலசலப்பு ஏற்பட்டிருக்காம்.. இதனால் வழக்கு சிபிஐக்கு கைமாறியது சரியான முடிவுதான் என யூனியன் நிர்வாகிக்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் பாராட்டு மழை பொழிந்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.. ‘‘பணியிட மாற்றத்திற்கு உத்தரவு வந்தும் ரிலீஸ் ஆர்டர் கொடுக்காததால காக்கிங்க ெநாந்து போய் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாடு முழுவதும் கடலோர காவல் நிலையத்துக்கு கடந்த செப்டம்பரில் புதிதாக போலீசாரை நியமிச்சாங்களாம்.. சட்டம் -ஒழுங்கு உள்பட பல்வேறு பிரிவில் இருந்து பலரும் விருப்பத்தின் பேரில் கடலோர காவல் நிலையத்துக்கு போனாங்க.. டிஜிபி உத்தரவின்படி ஒரு சேர தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 84 பேர் மாற்றப்பட்டாங்க.. டிஜிபி உத்தரவு என்பதால் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள், ரிலீஸ் ஆர்டர் கொடுத்து கடலோர காவல் நிலைய போலீஸ் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டவங்க போய் ரிப்போர்ட் பண்ணிட்டாங்க. இந்த பட்டியலில் குமரி மாவட்டத்துல இருந்து 11 பேர் சட்டம்- ஒழுங்கு, டிராபிக், மதுவிலக்கு போலீஸ் நிலையத்துல இருந்து கடலோர காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு இருந்தாங்க.. ஆனால் இவுங்களுக்கு இன்னும் அந்த மாவட்ட எஸ்.பி. ஆபீசில இருந்து ரிலீஸ் ஆர்டர் கொடுக்கலையாம்.. இதனால டிஜிபி உத்தரவு வந்து ரெண்டு மாதம் ஆகியும் பழைய பணியிடத்துலேயே தான் இருக்காங்களாம்.. தேர்தல் தேதி வந்துட்டா எந்த மாற்றமும் இருக்காது. அதற்கு முன்னாடி காக்கி உயர் அதிகாரி ரிலீஸ் ஆர்டர் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்காங்களாம்.. டிஜிபி ஆர்டர் என்பதால் எப்படியும் கொடுத்து தான் ஆகணும்.. ஆனால் கொடுக்க வேண்டிய ரிலீஸ் ஆர்டர், கொடுக்காமல் ரெண்டு மாசமாக கிடப்பில் இருக்கிறது என்பதால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்க நொந்து போய் இருப்பதாக பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புத்தாண்டு வாழ்த்து புகைச்சலை கிளப்பியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில இருக்குற ஒரு பெண் அதிகாரிக்கு பரிசுப் பொருட்களும், அன்பளிப்புகளும் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்போறாங்கன்னு லஞ்சத்தை ஒழிக்குற துறைக்கு 2 நாளைக்கு முன்னாடி தகவல் பறந்து போயிருக்குது. உடனே லஞ்ச ஒழிப்பு துறை ஆபிசர்ஸ் குயின்பேட்டை மாவட்டத்துல ஊரகத்தோட வளர்ச்சி பிரிவுல ரெய்டுக்கு போயிருக்குறாங்க. அப்போ பெண் அதிகாரியை பார்க்க வந்த ஆபிசர்ஸ் 40 பேரை தடுத்து நிறுத்தியிருக்காங்க. தொடர்ந்து நடத்துன ரெய்டுல தங்க காசு, பணம் பரிசுன்னு குவிந்திருந்துச்சாம். அதனை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செஞ்சிருக்காங்க. இதுல, பணக்கட்டு ஜன்னல் வழியாக வெளியே வீசப்பட்டிருந்துச்சு. இந்த ரெய்டு சம்பவத்தால, இதேபோல புத்தாண்டு வாழ்த்து பெற இருந்த அதிகாரிகள் வடைபோச்சேன்னு அதிர்ச்சியாகவும், வாழ்த்து சொல்றதுல இருந்து விடுபட்ட அதிகாரிகள் நிம்மதியிலயும் இருக்குறதாக குயின்பேட்டை மாவட்டத்துல பேசிக்கிறாங்க. மொத்தத்துல புத்தாண்டு வாழ்த்து மாவட்டத்துலயே புகைச்சலை ஏற்படுத்தியிருக்குது. இந்த புகைச்சலுக்கு நெருப்பு வெச்சது யாருன்னு பரபரப்பு போய்கிட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்காநகரில் இலைக் கட்சி ஆட்டம் காணுதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர் மாவட்டத்தில் மலராத கட்சியிலிருந்து மாறி வந்து, இலைக்கட்சியின் தகவல் பிரிவிலிருந்தவர் இப்போது நடிகர் கட்சிக்கு தாவி இருக்கிறார். இந்த நடிகர் கட்சிக்காரர், இலைக்கட்சியில் புறநகர் தகவல் பிரிவைச் சேர்ந்த பெண் பெயர் கொண்டவர் உள்ளிட்ட சிலரை பதவி தருவதாக ஆசை காட்டி தன் நடிகர் கட்சிக்கு இழுத்துப்போவதில் அதீத அக்கறையில் இருக்கிறார். பெண் பெயர் கொண்டவர், இலைக்கட்சிக்கான வேட்பாளர் பட்டியலில் மேலிடத்தில் பேசி சேர்த்து விடுவதாக பலரிடமும் பணம் வாங்கியதாக சமீபத்தில் புகார் எழுந்ததில், இலைக்கட்சி தலைமை கடிந்து கொண்டதால், இவரும் எங்காவது மாறிப்போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். என்ன செய்யலாம் என தன் ஆதரவாளர்களிடம் கேட்டதில், நடிகர் கட்சிக்கு போய் நாசமாவதை விட, இலைக்கட்சியின் மாஜியான உதயமானவரை அணுகி அவருக்கு கீழுள்ள அணியில் சேர்ந்து கட்சிக்குள்ளேயே இருந்து காலம் தள்ளுங்கள் என்று இந்த பெண் பெயர் கொண்டவருக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்களாம். ஆனாலும், ஏதாவதொரு கட்சிக்குத் தாவும் எண்ணமே இவரிடம் எகிறி நிற்பதால், கட்சித்தலைமையின் கூடுதல் கண்காணிப்பில் இவர் இருந்து வருகிறார். தூங்கா நகர் மாவட்டத்தில் இலைக்கட்சி வலுவிழந்து வரும் நிலையில், பெண் பெயர் கொண்டவரை மட்டுமல்லாது பலரையும் கட்சித்தலைமை இப்படி கூடுதல் கண்காணிப்பில் வைத்திருக்கிறதென்கின்றனர் இலைக்கட்சி முன்னோடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.