Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்கு குறைவான சிறுமியுடன் உறவு வைப்பது குற்றம்: கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்கு குறைவான சிறுமியுடன் உறவு வைப்பது போக்சோ சட்டத்தின் படி குற்றம் தான் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த 27 வயதான ஒரு வாலிபர், கடந்த 5 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆடை வாங்கித் தருவதாக கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. தொடர்ந்து இரு வீட்டினரின் சம்மதத்துடன் சிறுமியை அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே 17 வயது சிறுமியை வாலிபர் திருமணம் செய்த விவரம் மண்ணார்க்காடு போலீசுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன்பின் அந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த வாலிபர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: என்னுடைய மனைவியை முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி இரு வீட்டார் சம்மதத்துடன், அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளேன். எனவே என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த வாலிபர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபஸ்டியன், தனிநபர் சட்டத்தைவிட போக்சோ சட்டத்திற்குத் தான் முன்னுரிமை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பலாத்காரம் நடந்தபோது சிறுமிக்கு 17 வயதும் ஒரு மாதமும் மட்டுமே ஆகியிருந்தது. சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தபோதிலும் அவர்கள் போலீசிடம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. முஸ்லிம் மதத்தின் படி திருமணம் செய்திருந்தாலும் சிறுமி 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் செய்த குற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதில் எந்தக் காரணம் கொண்டும் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது. சிறுவர், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்கு குறைவான சிறுமியுடன் உறவு வைப்பது போக்சோ சட்டத்தின்படி குற்றமாகவே கருதப்படும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.