Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரிந்து சென்ற மனைவி வீடு மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு: மதுரவாயலில் கணவர் உள்பட 2 பேர் கைது

பூந்தமல்லி: மதுரவாயலில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி வீடு மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசிய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சக்திவேல் (31). மதுரவாயலை சேர்ந்த வர்ஷா (26) என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதமாக கணவரை பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாய் வீட்டில் வர்ஷா வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மனைவியை சந்திக்க சக்திவேல் சென்றுள்ளார். அப்போது, இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், வர்ஷாவை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சிறிய காயம் என்பதால் வர்ஷா அதை பெரிதுபடுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பு வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் என்பவர் நின்றுள்ளார். அப்போது நண்பருடன் பைக்கில் வந்த சக்திவேல், திடீரென மறைத்து வைத்திருந்த ஒரு வெடிகுண்டை வர்ஷா வீடு முன்பு வீசியுள்ளார். இதில் ரமேஷ் நூலிழையில் தப்பியுள்ளார். மற்றொரு நாட்டு வெடிகுண்டையும் வீடு மீது வீசிவிட்டு தப்பினர். அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதால் பரபரப்பு நிலவியது. ஆனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பிரிந்து சென்ற மனைவி வீடு மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிய சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சத்தீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.