Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மனைவியுடன் தொடர்பு என சந்தேகம் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை; 40 ஆண்டுகால நண்பன் கைது: கோவையில் ஒரே மாதத்தில் அரங்கேறிய 10வது கொலை

தொண்டாமுத்தூர்: கோவை அருகே மனைவியுடன் தொடர்பு என சந்தேகத்தால் வியாபாரியை வெட்டிக்கொன்ற 40 ஆண்டு நண்பன் கைது செய்யப்பட்டார். கோவை தொண்டாமுத்தூர் அருகே வெள்ளிமலைப்பட்டினம், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (62). பாக்கு மட்டை வியாபாரி. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி லதா விபத்தில் இறந்துவிட்டார். இதே பகுதியில் உள்ள மேற்கு வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (65). இவரது மனைவி பாக்கியா (58). இவர்களுக்கு திருமணமான ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

நாகராஜூம், காந்தசாமியும் 40 ஆண்டு கால நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவிக்கும், நண்பருக்கும் தொடர்பு இருக்குமோ என்று கந்தசாமி சந்தேகப்பட்டார். இதனால், எழுந்த வாக்குவாதம் காரணமாக 40 ஆண்டு கால நட்பு முறிந்தது. இதுதொடர்பாக அடிக்கடி பிரச்னை எழுந்தபோது, ஊர் மக்கள் பேசி சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும், நண்பர் மீது கந்தசாமிக்கு தீராத பகை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று (வெள்ளி) காலை நாகராஜ் பைக்கில் அருகில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அவரை, கந்தசாமி வழிமறித்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அவரை சரமாரியாக வெட்டினார். இதில், நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீசார் நாகராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து கந்தசாமியை கைது செய்தனர்.

இந்த கொலையுடன் கோவையில் ஒரே மாதத்தில் 10 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

* கோவையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 10 கொலை நடந்துள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் படுகொலைகள், மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர்கள் பெயர் விவரம்:

1. ஆக.3: பீளமேட்டில் சென்னையை சேர்ந்த நவீன் (25).

2. ஆக.6: கிணத்துக்கடவில் அஸ்வின் (22).

3. ஆக.10: மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவன் அமுதன் (19).

4. ஆக.12: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி (58).

5. ஆக.19: சிங்காநல்லூர் வேலுசாமி (56).

6. ஆக.19: சுல்தான்பேட்டையில் செந்தில்குமார் (39).

7. ஆக.19: கருமத்தம்பட்டியில் தேவதாஸ் (35)

8. ஆக.21: பெரியநாயக்கன்பாளையத்தில் பிரதீப்குமார்.

9. ஆக.25: அரசூரில் திருவாரூரை சேர்ந்த விக்னேஷ் (32).

10. ஆக.28: ஆலாந்துறை, வெள்ளிமலைப்பட்டினத்தை சேர்ந்த நாகராஜா (62).

இக்கொலைகள் தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்கள் மத்தியில் பீதி இன்னும் அடங்கவில்லை. போலீசார் அலட்சியமாக செயல்படாமல், ரோந்து பணியை தீவிரப்படுத்தி சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.