தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வெளியிடப்படும் பல அறிவிப்புகள் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. நிதி பற்றாக்குறை, அரசின் கடன் சுமையால் தங்களது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை என முதல்வர் விஜய் முதல் நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த சூழலில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய கார், மாத பராமரிப்புக்கு ரூ.75 ஆயிரம் என தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
விவசாயிகள் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளில் போதிய ஆர்வம் காட்டாமல் உள்ள தவெக அரசு, தற்போது எந்த எம்எல்ஏவுமே கோராத கார் தருவதாக அறிவித்தது சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் அறிவிப்பு என்பதனாலோ என்னவோ, உடனே வரிசை கட்டி சொகுசு கார்கள் ஆய்வுக்கு வரத் தொடங்கி விட்டன.
இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு கார் மதிப்பீடாக ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை என கணக்கிட்டால், அதற்கே அரசுக்கு ரூ.70 கோடிக்கு மேல் தேவைப்படும். இதுபோக கார் பராமரிப்பு ரூ.75 ஆயிரம் என கணக்கிடும்போது, அதற்கே ஆண்டுக்கு சுமார் ரூ.21 கோடி தேவைப்படும். 5 ஆண்டுகள் கணக்கிட்டால் சுமார் ரூ.105 கோடி தேவை. தொடர்ந்து நடக்கும் பேரவையில் பல்வேறு முக்கிய விவாதங்கள் நடக்கும்போது, நிதிச்சுமையை காரணமாக கூறி மறுக்கும் அரசு, கார் விஷயத்தில் அதிவேகம் காட்ட வேண்டிய அவசியம் புரியவில்லை.
சுமார் 90 சதவீதம் வரையிலான எம்எல்ஏக்கள் சொந்தமாக கார் வைத்துள்ள நிலையில், புதியதாக கார் தர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாநிலத்தின் நிதிச்சுமையை கருத்தில்கொண்டு, 59 திமுக எம்எல்ஏக்களும் கார் வேண்டாமென, தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களுக்கு கார் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேரவையில் தெரிவித்தார்.
பாமக மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தும் வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன. அறிவிப்பு தங்கள் மீதே ஏவுகணையாக பாயுவதை அறிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘கார் உள்ள தவெக எம்எல்ஏக்கள், கார் கேட்க மாட்டார்கள்’ என்று சமாளித்தார். அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பிலும் இதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
இது அரசை விமர்சிக்காமல் இருப்பதற்காக எம்எல்ஏக்களுக்கு வழங்கும் லஞ்சமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டோம் என்று கூறிவிட்டு, தற்போது மக்களின் பணத்தில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், காங். மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் பொருளாதாரீதியாக நலிவடைந்தவர்களுக்கு கார் வழங்கலாம் என கூறியுள்ளனர்.
பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட வறட்சி காரணமாக டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் அடியோடு படுத்து விட்டது. இதனால் அரசு முழுமையாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரூ.2,500 மகளிர் உரிமைத்ெதாகை வழங்க வேண்டும். புறநகர் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட எண்ணற்ற கோரிக்கைகளைப் பற்றி தவெக அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு, முதல் அக்கறை காட்ட வேண்டுமென தமிழக மக்கள் தெரிவிக்கின்றனர்.



