Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏனிந்த எஸ்கேப்?

கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வந்தபோது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கிய இப்படியொரு சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைவரான விஜய் நிரம்ப மவுனம் காத்தார். கரூர் மக்களிடம் அவர் முதலில் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும். ஆனால், கடந்த அரசின் மீதே குறை கூறுவதில் குறியாக இருந்தார். கரூரில் கூட்டம் நடந்த இடத்திற்கு 7 மணி நேரம் கழித்தே அவர் தாமதமாக வந்தார்.

கொளுத்தும் கோடை வெயிலில் இவ்வளவு நேரம் மக்கள் காத்திருந்தால் மயங்க மாட்டார்களா, சோர்வடைய மாட்டார்களா, நூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனரே? அப்போதைய திமுக அரசு போர்க்கால அடிப்படையில் களமிறங்கா விட்டால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும். அந்த துயர சம்பவம் முடிந்து பல நாட்கள் கழித்தே, ஆறுதல் என்ற பெயரில் வீடியோவில் பேசியிருந்தார் விஜய். சரியான நேரத்தில் பிரசாரத்திற்கு வந்திருந்தால், அப்படியொரு துயர சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே?

அந்த நிகழ்வை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை, கரூரில் நேற்று நடந்த விழாவில் அவர் பேசியதை வைத்தே கூறி விடலாம். கிட்டத்தட்ட 9 மாதங்கள் தாண்டி தற்போதுதான் கரூருக்கே வருகிறார். அந்த கூட்டத்தில், ‘நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது போலீஸ்தான்’ என்று காவல்துறை மீது குறை கூறியிருக்கிறார். பிரசாரத்தின்போது பல இடங்களில் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தவர், இப்போது குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு நடத்தியபோது, நூற்றுக்கணக்கானோர் தண்ணீர், உணவு கிடைக்காமல், வெயிலில் வாடி மயங்கி விழுந்தார்களே? முறையாக திட்டமிடாததால் தவெக கூட்டங்களுக்கு வந்த தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் பலியானார்களே? இதற்கெல்லாம் யார் காரணம்? இதற்கும் காவல்துறையையும், முந்தைய அரசையும் குறை கூறப்போகிறாரா முதல்வர் விஜய்?

கரூருக்கு மிக மிக தாமதமாக தற்போது என்ட்ரி கொடுத்ததற்கான காரணம் மக்கள் அறியாததல்ல...! திருச்சி கிழக்கில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததும், முதல்வர் விஜய் அங்கு சென்று பேசினார். தற்போது கரூர் எம்எல்ஏ பதவியை எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்து இடைத்தேர்தல் அறிவிப்பு வருகிறதல்லவா? இதை மனதில் வைத்தே நாள் குறித்து தற்போது முதல்வர் விஜய், கரூருக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் பிரசார பாணியிலான பேச்சுகள், பிற கட்சி எம்எல்ஏக்களை ஆசை காட்டி அழைப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை தவிர்த்து, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் முதல்வர் விஜய் அக்கறை காட்ட வேண்டும். ஆய்வு என்ற பெயரில் நடக்கும் அமைச்சர்களின் அட்ராசிட்டிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாள்தோறும் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும். அதை தவிர்த்து விட்டு மேடைதோறும் அடுத்தவர் மீது குறை கூறி எஸ்கேப் ஆகும் வித்தையை இனியாவது முதல்வர் மாற்றிக் கொள்வாரா என்பதுதான் மக்களின் இன்றைய கேள்வி.