Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யார் தூயசக்தி?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களை கைப்பற்றியது. தவெக 108 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால் அறுதி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் உரிமை கோரும் போதே ஆளுநருக்கு வழங்கிய கடிதத்தில் தனிப்பெரும் கட்சியான எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று குறிப்பிடாமல் 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று குறிப்பிட்டு சொதப்பியது.

இதனால் ஆளுநரிடம் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை கொடுக்க 3 நாட்களாக தவெக தலைவர் விஜய் அலைந்து திரிந்தார். இதற்கிடையில் பதவி, அதிகாரத்தை பல ஆ்ண்டுகளாக அனுபவிக்காமல் காய்ந்து கிடந்த காங்கிரஸ் அவசர அவசரமாக வலியபோய் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தல்வரை கூட்டணியை அவர்களுடன் உறுதி செய்து கொண்டது.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிக்கும் படி கேட்டுக்கொண்டார். இதனால் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட கூட்டணி தலைவர்கள் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து திமுக வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற கட்சியினர் ஆதரவுடன் தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து உள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்கும் நேரில் சென்று சந்தித்தார். இதை எல்லாரும் ஆஹா… முதல்வராக விஜய் பதவியேற்றதும் புதிய அரசியல் நாகரிகத்தை அரங்கேற்றவிட்டார் என்று புகழ்பாட தொடங்கினர். ஆனால் அவர் தனது சுயநலத்துக்காகத்தான் அனைத்து தலைவர்களையும் நேரில் சந்தித்தார்.

உண்மையில் முதல்வர் விஜய்க்கு அரசியல் நாகரிகம் இருந்திருந்தால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் அக்கட்சியில் முரண்பட்டு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் உருவான அணியை சந்தித்தார். ஏனென்றால் இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியவர்கள்.

அமமுக கட்சி எம்எல்ஏவை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது மட்டுமின்றி இது குதிரை வேகத்தில் செயல்படும் அரசு.. குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என்று சொல்லிக்கொண்டார். முதல்வராக பதவியேற்ற அன்றே தமிழ்நாட்டு அரசின் கஜானாவை முந்தைய அரசு துடைத்துவிட்டு சென்றுள்ளது என்று ஒரு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். 10 லட்சம் கோடி கடன்வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறினார். கடன் இல்லாமல் எந்த மாநிலமும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் கடனை கட்டுக்குள் தான் முந்தைய அரசு வைத்திருந்தது.

மேலும் ஒன்றிய அரசு நிதி பங்கீடு தராத போதும் இலவச திட்டங்கள் உள்பட அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதி விடுவித்தது. அதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. இவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் யாரோ எழுதி கொடுத்ததை வசனம் போல பேசும் முதல்வர் விஜய், இனியாவது திருத்திக்கொண்டு உண்மை நிலவரத்தை அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டு பேச வேண்டும். அப்படி செய்தால் யார் தீய சக்தி, யார் தூய சக்தி என்பதை நிச்சயம் உணர்ந்து கொள்வீர்கள்.