Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வில் ஈடுபட்டிருக்கும் குக்கர்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தொழிலாளர் தின பரிசளிக்க காத்திருக்கிறதாமே புல்லட்சாமி அரசு..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி சுற்றுலாவில் ஜொலிக்க காரணம் அனைத்தும் தாராளமாக கிடைப்பதுதானாம்.. சமீபத்தில் கூடிய சபை கூட்டத்தில் ஆளும் தரப்போ பல வாக்குறுதிகளை தேர்தலுக்காக அள்ளி வீசியதாம்.. ஆனால் அதற்கான நிதி குறித்த திட்டம் இல்லையாம்.. இதனால்தான் அப்போதே புதுச்சேரி வருவாய்க்கான வழிகள் தொடர்பாக சபையிலே கேள்வி எழுப்பினாராம் புல்லட்சாமி. புதிய மது ஆலை அறிவிப்புக்கு எதிராக வாய்திறக்காமல் அனைத்தும் கப்சிப் ஆன நிலையில் உள்ளூர்வாசிகளிடம் முணுமுணுப்பு பரவலாக எழுந்ததாம்.. இதுஒருபுறமிருக்க, தற்போது மதுபானத்தின் விலையையும் உயர்த்தும் முடிவை கையில் எடுத்து உள்ளதாம் புதுமையான அரசு. புதிய திட்டங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் 500 கோடி கரன்சியை எடுக்க வேறுவழியில்லாததால் இந்த நடவடிக்கையாம்.. மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே கலால் வரி, உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பை உயர்த்தி தொழிலாளர் தின பரிசளிக்க காத்திருக்கிறதாம் புல்லட்சாமி அரசு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் களம் இறங்கலாம் என்ற குழப்பத்தில் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறாராமே குக்கர்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘2026 சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை இறுதி செய்ய முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார் குக்கர்காரர். இவர் ஏற்கனவே தலா ஒரு முறை மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும், ஒரு முறை 20 ரூபாய் ேடாக்கன் கொடுத்து எம்எல்ஏவாகவும் இருந்தார். அதன்பிறகு அவருக்கு தேர்தல் களம் சாதகமாக அமையவில்லை. 2021 சட்டமன்ற தேர்தலில், கடலை மிட்டாய்க்கு பெயர் போன தொகுதி கைகொடுக்கும் என நம்பி நின்றார். கடைசியில் வெம்பி தோற்றுப் போனார். கடந்த எம்பி தேர்தலில் ஹனிபீ தொகுதியில் போட்டியிட்டாலும், அங்குள்ள மக்களும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் தனக்கு எந்த தொகுதி சாதகமாக இருக்கும் என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறாராம்.. இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்தினர் அதிகமாக இருக்கும் தொகுதியாக பார்த்து, அதில் எது தனக்கு சாதகமாக இருக்கும் என்ற தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளாராம்.. குறிப்பாக மெடல் மாவட்டத்தில் காராச்சேவுக்கு பெயர் போன தொகுதியை டிக் அடிக்கலாமா என யோசித்து வருகிறார்.. கடலை மிட்டாய் கசப்பை தந்தாலும், காராசேவு கை கொடுக்குமென களமிறங்க திட்டமிட்டுள்ளாராம்.. ஆனாலும், இதே தொகுதியை இலைக்கட்சியும் குறி வைப்பதால், கூட்டணியில் குழப்பம் வருமே என இவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர். நான் தாமரை மேலிடத்தில் பேசி சரிக்கட்டி விடுவேன் என்கிறாராம்.. இப்படியே மாவட்டம், மாவட்டமாக மாறுறாரு... ஓட்டுதான் விழ மாட்டேங்குது என இவரது ஆதரவாளர்களே கமெண்ட் அடிக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஜெயில் லேடி அதிகாரியின் பாதம் தொட்டு வணங்கிய சஸ்பெண்ட் அதிகாரி பற்றி தான் ஒரே பேச்சா இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ஜெயில் டிபார்ட்மெண்டில் லேடி ஆபீசரின் கை ஓங்கியிருப்பதாக அதிகாரிகளிடையே கிசுகிசுப்பு எழுந்திருக்காம்.. ஜெயில் ஒன்றில், கைதிகளுக்கு சலுகை வழங்குவதற்காக மாதம்தோறும் பெரும் தொகையை வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஒரு அதிகாரி வீட்டில் கொங்கு டிஐஜி ஒருவர் அதிரடி சோதனை நடத்தினாராம்.. அங்கிருந்த பல லட்சத்தை பறிமுதல் செஞ்சதோடு மட்டுமல்லாமல், அத்தொகையை அரசின் கருவூலத்தில் சேர்த்துட்டாராம்.. இதனால் கோபத்தின் எல்லைக்கே சென்ற அந்த லேடி அதிகாரி, இனிமேல் ஜெயில் டிபார்ட்மெண்டில் எந்த அதிகாரியும் சம்பாதிக்கவே விடமாட்டேன் என சபதம் எடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறாராம்.. அவரது தலைமையில் ரகசியமாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு அணியில், ரெண்டு ஜெயில் எஸ்.பி.க்கள் இடம் பெற்றிருக்காங்களாம்.. அதில் ஒருவர், மேல் பதவிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடும், இன்னொருவர் தனது பதவிக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு பழிவாங்கும் எண்ணத்தோடும் இருப்பவங்களாம்.. அதிலும் ஓய்வு பெற்றவர்களும் இருக்காங்களாம்.. இவர்கள் எந்த ஜெயிலில் என்னென்ன மோசடி நடக்குதுன்னு கண்டுபிடிச்சி, ரகசியமாக டீம் லீடருக்கு சொல்வாங்களாம்.. அந்த அதிகாரி எங்கு கொண்டு போனால் நடவடிக்கை பாயும் என்பதை தெரிந்து கொண்டு செல்வாராம்.. இப்படித்தான் ஜெயிலுக்கு வரும் மின்சாரத்தை அதிகாரிகள் வீட்டிற்கு பணம் செலுத்தாமல் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலை போட்டுக் கொடுத்தாராம்.. இதையடுத்து பல அதிகாரிகளுக்கு பல லகரங்கள் அபராதம் விதிக்கப்பட்டதாம்.. அதேபோல தூங்கா நகரத்து ஜெயிலில் நடந்த மோசடி தொடர்பாக, நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தவரும் இந்த லேடி ஆபீசராம்.. இதனால் ஜெயில் டிபார்ட்மெண்டில் அவருக்கென தனி பவர் இருப்பதாக சொல்றாங்க.. இதனால் சமீபத்துல சஸ்பெண்டான அதிகாரி, அந்த லேடி அதிகாரியை பார்த்து, பாதம் தொட்டு ஆசி வாங்கிட்டு வந்த விவகாரம்தான் ஒரே பேச்சா இருக்குதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.