கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில், தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் காவிரி ஆறு பாயும் குறுகிய மலைப்பகுதியே ‘மேகதாது’ என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணை மற்றும் நீர்மின் நிலையம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் இந்த அணை அவசியம் என்பது கர்நாடகா அரசின் வாதம்.
ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் இந்த அணையின் காரணமாக பாலைவனமாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதைத்தான் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடுமையாக எதிர்த்து, தடுத்து நிறுத்தினர். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை முறையாக திறக்க வேண்டும்.
ஆனால், மேகதாதுவில் புதிய அணை கட்டினால், உபரிநீர் தமிழ்நாட்டிற்கு வருவது முற்றிலும் தடுக்கப்படும். கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் (கே.ஆர்.எஸ்., கபினி போன்றவை) நிரம்பி, இந்த மேகதாது அணையும் நிரம்பிய பிறகே தமிழ்நாட்டிற்கு மிச்சம் மீதி தண்ணீர் திறக்கப்படும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாயம் முற்றிலும் காவிரியை நம்பியே உள்ளது.
தண்ணீர் வராமல் போனால், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்து, விவசாயம் பொய்த்து போகும். ஒட்டுமொத்த டெல்டா பகுதியும் பாலைவனமாக மாறிவிடும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும். காவிரி நீர் என்பது இரு மாநிலங்களுக்கும் பொதுவானது. கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை உடைத்து, தமிழ்நாட்டை வஞ்சம் தீர்க்க வேண்டும் என நேரடியாக மோதுகிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு. இந்த பேராபத்தை உணராமல், தனது சுயநலம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் அக்கட்சியுடன் கைகோர்த்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். “மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாட்டில் திமுகவும், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருக்கும் வரைதான் எங்களுக்கு பெரும் தடையாக இருந்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் முதல்வராக இருக்கிறார். அவரெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்’’ என வெளிப்படையாக கொக்கரிக்கிறார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார். “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை” என்றும் அவர் சாடியுள்ளார்.
ஆனால், அவருக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கிறார். மேகதாது அணை விஷயத்தில் உங்கள் வீரம் எங்கே சென்றது. இந்த பேராபத்தை உணராமல், கர்நாடகா முதல்வரை எதிர்க்க துணிவில்லாமல், சரண்டர் ஆகியுள்ளார் முதல்வர் விஜய் என டெல்டா விவசாயிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவர், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இதைத்தான் நாடும் எதிர்பார்க்கிறது.
