Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பதில் எங்கே?

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் முடிந்து இருக்கிறது. முதல்வராக பதவி ஏற்ற பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசியிருக்கிறார் முதல்வர் விஜய். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் வகையில் அமைந்த அவரது உரையில், எதிர்க்கட்சிகளின் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. அதோடு அடுத்து ஆட்சி எந்த திசையில் செல்லப்போகிறது என்ற பதிலும் இல்லை.

ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், தவெக அரசு அமைந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, `சிங்கப்பெண் படை’ காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை, திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கல்லூரி மாணவியை ஈவ்-டீசிங் செய்து இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்,

தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையில், பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாக ெசால்லியிருக்கிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்த எந்த கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால் சட்டம், ஒழுங்கு டிஜிபியை 9 மாதமாக நியமிக்கவில்லை, போதைப்பொருள் புழக்கம் தான் இந்த பிரச்னைகளுக்கு காரணம் என்று பூசி மெழுகி இருக்கிறார் முதல்வர் விஜய்.

மேலும் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500, மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத் தொகை, ஆண்டிற்கு 6 சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட தவெக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கேள்விக்கும் ஒரு பதிலும் இல்லை. எந்த திட்டத்திற்கும் எந்தவித டைம் லைனும் முதல்வர் விஜய் வழங்கவில்லை.

ஆனால் சிங்கப்பெண் படை, 717 டாஸ்மாக் மூடல், அம்மா உணவகங்கள் புதுப்பித்தல், போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், சட்டவிரோதமாக செயல்பட்ட கல் குவாரிகளுக்கு சீல் வைத்தது உள்ளிட்டவை தனது 40 நாள் அரசின் சாதனை என்று அவையில் தெரிவித்து இருக்கிறார். மின்வெட்டு பிரச்னை கூட நிர்வாக குளறுபடி என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு சிலர் வேண்டுமென்றே சதி செய்கிறார்கள்.

இதனை தடுக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம். விரைவில் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்த முதல்வர் விஜய், விவசாயிகள் போராட்டத்திற்கு கூட எதிர்க்கட்சி தூண்டுதலே காரணம் என்று கூறி தட்டிக்கழித்து இருக்கிறார். மொத்தத்தில் முதல்வர் பதில் உரையில் பல கேள்விகளுக்கு பதிலே இல்லை. அதை விட முக்கியமாக தனது உரையில் அவர் தெரிவித்த குட்டிக்கதையும், உரை இறுதியில் அவர் காட்டிய சைகையும், அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கும், பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கும் உரித்தானது இல்லை.