மேற்கு ஆசியாவில் அமெரிக்கா-ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் மோதலில், இதுவரை 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் மாலுமிகள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் பயணம் செய்த ‘மொம்பாசா’ மற்றும் ‘அல்-பஹியா’ ஆகிய எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், இந்திய மாலுமி ஒருவர் பலியானார். 6 இந்தியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
முன்னதாக நடைபெற்ற மோதல்களில், அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உட்பட மேலும் சிலர் உயிரிழந்தனர். ஆனால் இன்று வரை உலகின் விஸ்வகுரு என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. வாய்மூடி மவுனியாக இருக்கிறார் பிரதமர் மோடி.
அதே சமயம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்த்தால் கட்டிப்பிடிக்கிறார், ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்திய பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறார். ஆனால் அப்பாவி இந்தியர்களை, இந்தியாவுக்கு வரும் சரக்கு கப்பலை குறிவைத்து அமெரிக்காவும், ஈரானும் தாக்குவதையும், அதில் 11 இந்தியர்கள் இதுவரை பலியாகி இருப்பதையும் பற்றி எந்தவித கருத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்ய மறுக்கிறார். எத்தனை வேதனை இந்த செயல்? நாட்டு மக்களின் மனதில் கடும் வேதனையை உருவாக்கி இருக்கிறது.
ஈரான், அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது மட்டுமல்ல, எந்த பிரச்னைக்கும் பிரதமர் மோடி பதில் சொல்வதில்லை. அவர் விஸ்வகுருவுக்கு பதில் மவுன குருவாக மாறிவிட்டார். 23 லட்சம் மாணவர்களை பாதித்த நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கும் அவர் பதில் சொல்வதில்லை. 18 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் நடத்த பிரச்னை குறித்தும் பதில் பேசுவதில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வால் தினம், தினம் பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் பதில் பேசுவதில்லை.
கச்சா எண்ணெய் பழைய நிலைக்கு சென்ற பிறகும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்காமல் இருந்த போதும் பதில் பேசுவதில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியபோதும் பதில் பேசுவதில்லை. ஈரான், அமெரிக்கா மோதலில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானை அழைத்தபோதும் பதில் பேசுவதில்லை.
பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி பேசும் போதும் பதில் பேசுவதில்லை. ஏன் 100 கோடி இந்து மக்களின் நம்பிக்கையாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலில் கோடிக்கணக்கில் நடந்த பணம் முறைகேடு குறித்தும் எந்த பதிலும் அவர் பேசுவதில்லை. முற்றிலும் மவுனகுருவாகி விட்டார் பிரதமர் மோடி.
அவர் பேச வேண்டும் என்றால் தேர்தல் வர வேண்டும். அவர் பேச வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரைவர வேண்டும். அவர் பேச வேண்டும் என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். அவரது 12 ஆண்டுகால பிரதமர் பதவியில் 100 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று சாதித்து இருக்கிறார். இதுதான் அவரது மிகப்ெபரிய சாதனை.
