Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

Whatsapp ‘UserName' வசதி குறித்த பாதுகாப்பு கேள்விகளுக்கு விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியது ஒன்றிய அரசு

டெல்லி: வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய 'யூசர்நேம்' (Username) அம்சம் குறித்த பாதுகாப்பு கவலைகளுக்கு விளக்கம் அளிக்க, மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு முழுமையான தீர்வு காணும் வரை இந்த புதிய அம்சம் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வராது என்று மெட்டா நிறுவனம் தற்காலிகமாக உறுதியளித்துள்ளது.

தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவரைத் தொடர்புகொள்ள மொபைல் எண் அவசியமாக உள்ள நிலையில், இனி மொபைல் எண்ணை மறைத்துவிட்டு தனித்துவமான 'யூசர்நேம்' மூலமாகவே மற்றவர்களுடன் பேசும் புதிய வசதியை வாட்ஸ்அப் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் பெரிய வாட்ஸ்அப் குரூப்களில் இணையும் போதும், புதிய நபர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போதும் பயனர்களின் மொபைல் எண் ரகசியமாக வைக்கப்படும்.

இது ஒரு சிறந்த பாதுகாப்பு அம்சமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த ரகசிய காப்பு வசதியைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பிரபலங்கள் அல்லது அரசு அதிகாரிகள் போல போலியான கணக்குகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற அதிக வாய்ப்புள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் மூலம் மக்கள் சுமார் ரூ.22,500 கோடியை இழந்துள்ளதால் இந்த கவலை அதிகரித்துள்ளது.

இந்த அச்சத்தைப் போக்க தங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது. மோசடிகளைக் கண்டறிந்து முடக்கும் அல்காரிதம்கள் பயன்படுத்தப்படும் என்றும், ஒரே நேரத்தில் பலரைத் தொடர்பு கொள்ள முயலும் கணக்குகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. மேலும், பிரபலங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாதவாறு அவை முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டு, உரியவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும் என்றும் மெட்டா விளக்கம் அளித்துள்ளது.

இந்த புதிய முறையில் பயனர்கள் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் ஒரு தனித்துவமான யூசர்நேமை உருவாக்கிக் கொள்ளலாம். இதில் மற்றவர்கள் உங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் வசதி இருக்காது என்பதால், உங்களது துல்லியமான யூசர்நேமை தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தொடர்புகொள்ள முடியும். அத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக 'யூசர்நேம் கீ' என்ற ரகசிய குறியீடும் இருக்கும். இந்த குறியீட்டைத் தெரிந்தால் மட்டுமே உங்களை முதன்முறையாகத் தொடர்புகொள்ள முடியும் என்பதால், இது முற்றிலும் ஒரு பாதுகாப்பு அம்சமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.