அருணாச்சல் மாநிலத்தை சேர்ந்த பெண் சீனாவில் சிக்கித்தவிக்கிறார். காரணம் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று சீனா அறிவித்துவிட்டது. அருணாச்சல் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதே அதன் காரணம். இந்திய பிரஜை சீனாவில் தவிக்க பிரதமர் மோடி இன்று வரை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஏன் வெளியுறவுத்துறை கூட வாய் திறக்க மறுப்பது என்ன ஒரு ராஜதந்திரம்? அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் லண்டனில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார்.
வழியில் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் இறங்கி 3 மணி நேரத்துக்குப்பின் மாற்று விமானத்தில் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார். கடந்த 21ம் தேதி இவர் ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என சீன குடியுரிமை அதிகாரிகளும், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளும் கூறியுள்ளனர். காரணம் அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த இடம் அருணாச்சலப் பிரதேசம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அருணாச்சலப் பிரதேசம் சீனாவில் இருக்கும் பகுதி எனக் கூறி, அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி பெமா வாங்கை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
18 மணி நேரத்துக்கு மேலாக அவர் ஷாங்காய் விமான நிலையத்தில் சிறைவைக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டை முடக்கி, அவர் ஜப்பான் செல்வதையும் தடுத்து நிறுத்தினர். அப்போது பெமா வாங் சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி சீன அதிகாரிகள் கேலி செய்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி மற்றும் இதர வசதிகளை பெமா வாங் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. பின்னர் லண்டனில் உள்ள நண்பர் மூலம் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை பெமா வாங் தொடர்பு கொண்டார். இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு பெமா வாங்கை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிக்கப்பட்ட அருணாச்சல் பெண்மணி பெமா வாங் தாங்டாக் கூறுகையில், ‘‘இது இந்திய இறையாண்மை மீதான நேரடி தாக்குதல். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இந்திய அதிகாரிகளும் சீன அரசுடன் பேச வேண்டும். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியர்கள் வெளிநாடுகள் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார். இந்தியா - சீனா இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் முடிந்துவிட்டது. அதனால் சீனாவுடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உறவு மீண்டும் துளிர்த்து உள்ளது. இருதரப்புக்கும் இடையே விமான சேவை கூட தொடங்கப்பட்டு விட்டது.
இந்த உறவு நிலையை மீறி இந்திய குடிமகளை, சீன குடியுரிமை அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். வெளியுறவுத்துறை தலையிட்டு அவரை மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அதிகாரப்பூர்வமாக ஒரு எதிர்ப்பை கூட ஒன்றிய அரசு பதிவு செய்யவில்லை. ஒரு இந்திய பிரஜை அவமானப்படும்போது, கைதி போல வெளிநாட்டில் நடத்தப்படும்போது, அதுவும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆவணமான பாஸ்போர்ட்டை செல்லாது என்று ஒரு நாடு குறை மதிப்பிடும்போது கொந்தளிக்க கேட்கவில்லை, ராஜ்ஜிய ரீதியாக ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் இருப்பது என்ன விதமான ராஜதந்திரம்? ஒரு வேளை இதுதான் மோடி தந்திரமோ?
அந்த ஒன்றிய வெளியுறவுத்துறைக்குத்தான் வெளிச்சம்.


