Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்; சிலர் சோபா வந்தவுடன் நம்மை விட்டு சென்றுள்ளனர்: உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றும், சிலர் சோபா வந்தவுடன் நம்மை விட்டு சென்றுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை திருவேற்காட்டில், திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் கே.காஜாவின் பேத்தி சமீனா சப்ரியத்-ஹனீஃப் கான் திருமண விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நம் திமுக தலைமை நிலையம், அண்ணா அறிவாலயத்துக்குள் யார் நுழைய வேண்டும் என்றாலும், யார் உள்ளே வர வேண்டும் என்றாலும் அவர்கள் முதலில் இரண்டு பேரின் அனுமதியை வாங்க வேண்டும். ஒன்று பூச்சி முருகன், இன்னொன்று நம் துறைமுகம் காஜா. இவர்கள் இரண்டு பேரும் நினைத்தால் மட்டும்தான் அண்ணா அறிவாலயத்துக்குள் யாராக இருந்தாலும் நுழைய முடியும். அதனால்தான் நம் தலைவர் அடிக்கடி சொல்வார், துறைமுகம் காஜாவும், பூச்சி முருகனும் அண்ணா அறிவாலயத்தின் இரண்டு தூண்கள் என்று பெருமையோடு குறிப்பிடுவார்.

இந்த விழாவில் இஸ்லாமிய பெருமக்கள் பலபேர் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடந்தாலும், இன்றைக்குச் சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள். ஏன்னென்றால் இஸ்லாமியர்களுக்கும் திமுகவிற்கான அந்த உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும் சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றைக்குமே ஒரு காவல் அரணாக நிச்சயம் இருக்கும். உங்களோடு நம் தலைவரும், திமுகவும் உறுதுணையாக நிற்கும். இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலும் நம் தமிழ்நாட்டை, நம் திமுக, நம் தலைவரும் நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், தமிழ்நாட்டை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.

திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், டி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் அல்தாஃப், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கு.பிச்சாண்டி, தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், மதிவேந்தன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை, தாயகம் கவி, மாவட்ட செயலாளர்கள் சுந்தர், கோ.தளபதி, மயிலை வேலு, எம்பிக்கள் வில்சன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கட்டியணைத்து அன்பை பரிமாறிய உதயநிதி ஸ்டாலின், சீமான்

திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலினும், சீமானும் சந்தித்து கொண்டனர். அரசியல் முரண்பாடுகளை தாண்டி இருவரும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறி கொண்டனர். பின்னர் இருவரும் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அருகருகே அமர்ந்து சிரித்து பேசினர். இந்த திடீர் சந்திப்பு மற்றும் அவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சீமானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.