சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், வரும் 8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 9ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வரும் 10ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வரும் 11ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வரும் 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

