மேற்கு வங்கத்தில் பாதுகாப்பில்லை சிறப்பு தீவிர திருத்த பணியில் பங்கேற்க பிஎல்ஓக்கள் அச்சம்: தேர்தல் ஆணைய பயிற்சியில் எதிர்ப்பு
கொல்கத்தா: தமிழ்நாடு, மேற்கு வங்கம், உபி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு பணி வரும் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக மேற்கு வங்கத்தில் 80,861 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சியை தேர்தல் ஆணையம் நேற்று நடந்தது. இதில், கணக்கெடுப்பு படிவங்களை எவ்வாறு சரிபார்ப்பது, வாக்காளர்களுடன் ஒருங்கிணைப்பது மற்றும் பிஎல்ஓ செயலியில் தகவல்களை எவ்வாறு பதிவேற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு பிஎல்ஓவுக்களுக்கும் அடையாள அட்டை மற்றும் தலையில் அணிந்து கொள்ள தொப்பி மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியின் போது, பிஎல்ஓக்களாக நியமிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பயிற்சி மற்றும் களப்பணி இரண்டின் போதும் மத்திய படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசின் பொறுப்பு என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
மேலும், பெரிய வாக்குச்சாவடிகளுக்கு 2 பிஎல்ஓக்களை நியமிக்கும் யோசனையையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதவிர நேற்று நடந்த பயிற்சியில் தங்கள் பங்கேற்றதற்கான ஆவணங்களை தராததால் தங்கள் பணியாற்றும் பள்ளியில் எப்படி தகவலை உறுதிபடுத்துவது என்றும் பிஎல்ஓக்கள் கேள்வி எழுப்பினர்.
‘‘நாங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், ஆனால் ஆணையம் எங்களுக்கு சரியான ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும். இவை இல்லாமல், நாங்கள் தொடர முடியாது’’ என பயிற்சிக்கு வந்திருந்த பலர் கூறினர். மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் 3,000க்கும் மேற்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றும் நாளையும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான பூத் ஏஜென்ட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாளைக்கும் அனைத்து பயிற்சியையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.