Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேற்குவங்கத்தில் மாமூல் வசூலித்த பாஜக எம்எல்ஏவுக்கு தர்மஅடி: கட்சித் தொண்டர்களே தாக்கியதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மாமூல் வசூலிப்பது தொடர்பான கோஷ்டி மோதலில் பாஜக எம்எல்ஏவை அவரது சொந்த கட்சி தொண்டர்களே சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் தெப்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ சுபாசிஸ் ஓம் என்பவருக்கும், மாவட்ட பாஜக தலைவரான தன்மய் தாஸ் என்பவருக்கும் இடையே அரசு திட்டங்களில் மாமூல் வசூலிப்பதில் நீண்ட நாட்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் சிலர், எம்எல்ஏ சுபாசிஸ் ஓமை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கியதில் அவரது தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எனது தொகுதியில் விபிஜி-ராம்-ஜி திட்ட பயனாளிகளிடம் தன்மய் தாஸ் ஆதரவாளர்கள் பணம் கேட்டு மிரட்டியதை தட்டிக்கேட்டதால், என் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்’ என்று குற்றம்சாட்டினார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தன்மய் தாஸ் தரப்பினர், கான்ட்ராக்டர்களிடம் எம்எல்ஏவின் ஆட்களே மாமூல் வசூலிப்பதாக பதில் புகார் கூறியுள்ளனர். இந்த வன்முறை மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் தனித்தனியாக புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘கட்சியின் ஒழுக்கத்தை மீறி எம்எல்ஏவை தாக்கியவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.