Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மேற்குவங்கத்தில் உச்சக்கட்ட அரசியல் பதற்றம்; பாபர் மசூதிக்கு அடிக்கல் - பிரம்மாண்ட கீதை பாராயணம்: தேர்தல் ெநருங்கும் நிலையில் மத நிகழ்வுகளால் மம்தாவுக்கு நெருக்கடி

கொல்கத்தா: முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், கொல்கத்தாவில் இன்று 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கீதை பாராயண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான நேற்றைய தினம் (டிசம்பர் 6), முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்காவில் பாபர் மசூதியை போன்ற வடிவிலான புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘வகுப்புவாத அரசியல் செய்கிறார்’ எனக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஹுமாயூன் கபீர் கூறுகையில், ‘கோயில் அல்லது தேவாலயம் கட்டுவதைப் போலவே மசூதி கட்டுவதும் அரசியலமைப்புச் சட்டம் எனக்கு வழங்கியுள்ள உரிமையாகும். சட்டப்பிரிவு 26(ஏ)-ன் கீழ் பொது அமைதிக்கு பாதிப்பில்லாமல் மத நிறுவனங்களை நிர்வகிப்பது தவறல்ல’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தை திரிணாமுல் காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியல் என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஏற்படுத்திய அனல் தணிவதற்குள், கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரம்மாண்டமான முறையில் பகவத் கீதை பாராயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனாதன சம்ஸ்கிருதி சன்சத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 5 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் கீதை சுலோகங்களை உச்சரிக்க உள்ளனர். மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ், தீரேந்திர சாஸ்திரி மற்றும் சுவாமி ஞானானந்தாஜி மகராஜ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வழிநடத்துகின்றனர். இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கம் கொண்டது என்றும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலேயே நடத்தப்படுகிறது என்றும் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெறும் இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மக்கள் இந்த நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தீவிரமாக அழைப்பு விடுத்துள்ளனர். அதேவேளையில், இதுபோன்ற நிகழ்வுகளை ‘மதரீதியான போட்டி’ என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பக்கம் மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதும், மறுபக்கம் பிரம்மாண்ட கீதை பாராயணம் நடைபெறுவதும் மேற்கு வங்க அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே புதிய மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.