Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவியருக்கு வரவேற்பு தொகுப்பு ரூ.16 கோடியில் வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: நலப்பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு வரவேற்பு தொகுப்பு ரூ.16.24 கோடி செலவில் வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:

* பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில், கல்லூரி மாணவ, மாணவியர் நலன் கருதி, குறைவான மாணவர் சேர்க்கை உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாக நிலை உயர்த்தப்படும்.

* கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவியரின் நலன் கருதி, வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 7 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவியரின் நலன் கருதி, 400 மாணவியர் பயன்பெறும் வகையில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.3 கோடியில் தொடங்கப்படும்.

* விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும்.

* 37 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியர் எண்ணிக்கையினை உயர்த்தப்படும்.

* நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு வரவேற்பு தொகுப்பு ரூ.16.24 கோடி செலவில் வழங்கப்படும்.

* அரசால் அங்கீகரிக்கப்பட்ட 15 தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவு மானியத் தொகையினை உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.45.60 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.

* 318 கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் இன்வெர்ட்டர், குளிர்சாதனப்பெட்டி, தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி வழங்கப்படும்.

* விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவியர்களின் சுயபாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கையினை ஊக்கப்படுத்தும் வகையில் தற்காப்புக் கலையில் அடிப்படைப் பயிற்சி கலை மற்றும் பண்பாட்டுத் துறை மற்றும் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ரூ.2.31 கோடியில் வழங்கப்படும்.

* சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மூக்குக்கண்ணாடி உதவித்தொகை ரூ.500லிருந்து ரூ.750ஆக உயர்த்தி வழங்கப்படும்.