வேலூர்: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த நவம்பர் 10ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பாஜ தலைவரை வரவேற்பதற்காக பேப்பர் பிளேட்டுகளில் மலர்களுடன் பெண்கள் வரிசையில் நின்றிருந்தனர். பர்தா அணிந்தபடி சில இஸ்லாமிய பெண்களும் இருந்தனர். இதில் ஆண் ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வரவேற்க காத்திருந்தார். தற்போது பெண் வேடத்தில் ஆண் ஒருவர் கூட்டத்தில் நின்றிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியில் பர்தா அணிந்த நபரின் முகத்தில் இருந்து ஆடை விலகுவதை சரிசெய்கிறார். இதனை அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் கண்டுபிடித்து அதிர்ச்சியுடன் பார்க்கிறார்.
பாஜவுக்கும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இஸ்லாமியர்கள் ஆதரவு இருப்பதாக மக்களை நம்ப வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இஸ்லாமிய பெண்களை அழைத்தும் போதிய எண்ணிக்கையில் வராததால் பாஜ நிர்வாகி ஒருவரே கூட்டத்தில் பர்தா அணிந்து பங்கேற்றிருக்கலாம் என இப்போது கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ‘லேடி கெட்டப்பில் வந்த ஜீன்ஸ்’ என கிண்டலடித்தும், திட்டியும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசுகின்றனர். மேலும் பர்தா அணிந்த ஆண், இஸ்லாமிய பெண்கள் கூட்டத்தில் புகுந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளது.


