Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாங்க எங்க மருமகளே...

தமிழக முதல்வர் அன்புடன் வரவேற்ற சாதனைப் பெண் !

ஒரு தொழில் துவங்கி அதை வெற்றிகரமாக ஒரு பெண் நடத்தவே அவ்வளவு சவால்களை சந்தித்தாக வேண்டும். பெண்தானே என்கிற அலட்சியம் இருக்கும், மட்டம் தட்டுவார்கள் அனைத்தும் கடந்து தனக்கென ஒரு அடையாளமும், அங்கீகாரமும் பெறுவதற்குள் வயதும் காலமும் கூட உருண்டோடி விடும். ஆனால் துபாயைச் சேர்ந்த சாரா பல வருடங்களாக ஈவன்ட் மேனேஜ்மென்ட், இன்ஃப்ளூயன்சர் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத் திறமையால்

வெற்றிப் பெற்று வருகிறார் சாரா.

ஊர், உறவு, மொழி அனைத்தும் சொந்தமாக இருந்தாலே ஒரு பெண் ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்வதில் சவால்கள் ஏராளமாக இருக்கும். அப்படி இருக்க அயல்நாட்டில் அதுவும் அரபு நாட்டில் எப்படி சாத்தியம்? பேசத் துவங்கினார் சாரா.

‘‘எனக்கு தாய்மொழி மலையாளம், பூர்விகம் கேரளா, பிறந்தது மும்பை, செட்டில் ஆனது தமிழ்நாடு, குற்றாலம். ஆமா, எனக்கு எல்லாமே சொந்த ஊர்தான். இப்போது துபாயில் செட்டிலாகிட்டேன். அயலக தமிழகம் நிகழ்ச்சி இங்கே தமிழக அரசு சார்பாக நடந்துச்சு. அதில் என் பிறந்த ஊர் கேரளா, புகுந்த வீடு தமிழ்நாடு என சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலின் சார் கிட்ட கேள்விகள் கேட்டேன். ‘‘வாங்க எங்கள் மருமகளே” என முதல்வர் என்னை கூப்பிட்டுப் பேசிய வீடியோ இப்பவும் வைரலாக இருக்கு. நான் லயோலா கல்லூரியில் வொகேஷன் குரூப் எடுத்து, ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிச்சேன். பிறகு ஒரு தனியார் ஹோட்டலில் வேலை செய்தேன். கெஸ்ட் ரிலேஷன் எக்ஸிக்யூட்டிவ் அதன் பிறகு தான் துபாய் வாழ்க்கை. அங்கே எனக்கு முன்பே அக்கா செட்டில் ஆகி இருந்தாங்க. ஒரு வருடம் நானும் அங்கே இருந்தேன், ஆனால் பெரிதாக எனக்கு அங்கே இருந்த சூழல் பிடிக்கலை. திரும்ப சென்னை வந்துட்டேன். ஒரு இடைவேளை, மீண்டும் துபாய் வாழ்க்கை அங்கே இருந்த உயரமான ரெஸ்டாரண்டில் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் ஆபிஸர். தொடர்ந்து துபாயின் தமிழ் பண்பலையில் ரேடியோ ஜாக்கி ஆகவும் வேலை செய்தேன். கொரோனா காலத்திலேதான் ரேடியோ ஜாக்கி வேலையில் சில பிரச்னைகள் ஆரம்பிச்சது. என்னுடன் சேர்ந்து இன்னொரு ஐந்து சீனியர்களும் வெளியேற வேண்டிய நிலைமை உருவானது.

அப்போ சமூக வலைதளங்களில் இன்ஃப்ளுயன்சராக வேலை செய்ய ஆரம்பிச்சேன். இந்தியாவில் இருக்கிறது மாதிரி யார் வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் பொருட்கள் விற்பனை அங்கே செய்ய முடியாது. அதாவது இன்ஃப்ளூயன்ச`ராக குக்கிங், ஃபேஷன், திரைப்படங்கள் குறித்த வீடியோக்கள் செய்யலாம். அதாவது சொந்த கன்டென்ட் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு பொருளை வாங்குங்க அப்படின்னு நீங்க வீடியோ போடுறதா இருந்தா நிச்சயமா அரபு நாடுகளில் லைசென்ஸ் எடுத்தாகணும். அப்படி லைசென்ஸ் வாங்கிய முதல் புராடெக்ட் புரமோட்டர் நான்தான். அதன் பிறகு தான் புராடெக்ட் புரமோஷன்களுக்கு சட்ட ரீதியாகவே லைசென்ஸ் அவசியம் என கட்டுப்பாடு விதிச்சாங்க. புரமோஷன்களுக்காக ஹோட்டல்களுக்கு செல்லும்பொழுது, நண்பர் ஒருத்தர் நீங்களே ஏன் ஒரு நிகழ்ச்சியை முழுமையாக நடத்தக்கூடாது, ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்யலாமே அப்படின்னு கேட்டார். அந்த மொமென்ட்தான் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கையில் எடுக்கக் காரணம். ராம் சார் மற்றும் சக்தி ராம் ரெண்டு பேரும் தான் என்னை ரேடியோ ஜாக்கியாக அறிமுகம் செய்தாங்க. கிட்டத்தட்ட எனக்கு இன்னொரு அப்பா அம்மா. ஆர்.ஜே நிம்மி எனக்கு வழிகாட்டியாக இருந்தாங்க ” சாராவின் பிரதான வேலைகள் என்னென்ன தொடர்ந்தார்.

‘‘துபாயில் நடக்கும் பெரும்பாலான தமிழ் நிகழ்ச்சிகள் பொறுப்பு என்னுடையதுதான். பிரபலங்களை சந்திப்பது, நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது, அவர்களின் உபசரிப்பு, நிகழ்ச்சியின் மேடை டிசைன்கள் துவங்கி, விருந்தினர்கள் உபசரிப்பு வரை அதாவது ஒரு நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி நடக்கணும் என திட்டமிடுவது தான் என்னுடைய பிரதான வேலை. இதற்காக நிறைய டிராவல் செய்வேன். நான் ஒரு சிங்கிள் மதர். எனக்கு மூணு பசங்க இருக்காங்க. ஆனால் என்னுடைய போராட்டம் என்னுடைய வாழ்க்கை அவங்களுக்கு முழுமையா புரியும். என்கிறதால் அவங்க தான் எனக்கு முழு சப்போர்ட் கொடுக்குறாங்க. 12, 10, 8 வகுப்புகள் படிக்கிறாங்க. ஹாஸ்டலில் தான் படிப்பு. ஆனால் என்னால் அவங்களைப் பிரிஞ்சு இருக்க முடியலை, அவங்களுக்கும் அப்படிதான், அதனால் வீட்டுக்கே வந்திட்டாங்க. அவங்கதான் என்னுடைய உலகம். எங்கே எந்த வேலைக்கு போனாலும் நானாக போனில் அழைத்து பேசுற வரையிலும் என்னைக் கூப்பிட மாட்டாங்க. அந்த அளவுக்கு புரிதல் உள்ள பசங்க. என்னுடைய அம்மா எனக்கு இன்னொரு பலம். நான் ஒரு அம்மா பொண்ணு. நான் எங்கே போனாலும் நானும் சிரிச்சுகிட்டே இருப்பேன் மத்தவங்களையும் சிரிக்க வச்சிடுவேன். அதனாலேயே உடன் இருக்கிற அத்தனை நண்பர்களும் ‘சாரா ஸ்பிரட் ஸ்மைல்ஸ்' அப்படின்னு சொல்வாங்க. அதையே அடிப்படையாக வெச்சு ‘‘ஸ்பிரட் ஸ்மைல்” என்கிற பிராண்டையும் உருவாக்கினேன். என்னும் சாரா இசையமைப்பாளர் தேவாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி முதல், தொடர்ந்து அவர் நிர்வகிக்கும் நூர்‘ஸ் கோல்டன் ஸ்பேரோ ப்ரொடக்ஷன் கம்பெனி மூலம் ‘ஏழு கடல் ஏழுமலை' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் விரைவில் நடத்தவிருக்கிறார். திருமணம், கணவர், குழந்தைகள் இப்படி எந்தக் காரணமும், சாக்கு போக்கும் சொல்லாமல் சொந்தக் காலில் ஓட ஆரம்பிச்சாலே நமக்கான அடையாளம் நம்மை தானாக வந்தடையும். பெண்களுக்கு வேலையும், அல்லது சொந்தத் தொழில் எதோ ஒரு நேர்மையான வருமானம் நிச்சயம் அவசியம். அது வெறும் வருமானம் இல்லை, நமக்கான அங்கீகாரம். நம்முடைய அடையாளம் அதற்காக நாம எந்த சவாலையும் எதிர்கொள்ளலாம்'' தலை நிமிர்ந்து சொல்கிறார் சாரா.

- ஷாலினி நியூட்டன்