Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகளில் கூடுதல் சுங்க கட்டணம் வசூல்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகளில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சதீஷ் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி பேசுகையில், பாலக்கோட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.5 கோடி வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சனத்குமார நதியில் கழிவுநீர் ஓடுகிறது.

இந்த கால்வாயை தூர்வார வேண்டும். தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் கட்டாயமாக கூடுதலாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூடுதல் கட்டணம் வசூலிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி முரளி பேசுகையில், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின்நிலைய பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை தீவனப்புல் நறுக்கும் இயந்திரம் வழங்குவதில் அதிக கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.

விவசாய சங்க நிர்வாகி சின்னசாமி பேசுகையில், தரம்புரி மாவட்ட ஆவின் நிர்வாகம், விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்கிறது. இதன் மூலம் தர்மபுரியிலேயே பால் பவுடர், பால் பிஸ்கட் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமக்காள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார். விவசாயி சிவலிங்கம் பேசுகையில், ஒகேனக்கல், பாலக்கோடு வனத்தில் நாட்டு மாடு மேய்க்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், வனத்தில் மாடுகள் தங்க அனுமதி இல்லை.

எனவே, வனத்தில் உள்ள கோயில் மானிய நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் பட்டி அமைத்து கால்நடைகள் தங்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் பால், சாணம், கோமியத்தை சேகரிக்க முடியும். இயற்கை மருந்துகள், பூச்சி விரட்டி, பஞ்ச காவியம், இயற்கை களைக்கொல்லி தயாரிக்கவும் முடியும் என்றார்.

தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், ஜெர்தலாவ் ஏரி பாசன திட்டப்பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அரூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து ஒரு மாதமானாலும் விவசாயிகளுக்கு அழைப்பு வருவதில்லை. ஆனால், வியாபாரிகள் டன் கணக்கில் கொண்டு வரும் மூட்டைகளை முதலில் எடுத்துக்கொள்கின்றனர்.

அதேபோல், நெல் எடை போட்டு மூட்டை பிடிப்பதற்கு கிலோவுக்கு ஒரு ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, பணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.விவசாயிகளின் கேள்விக்கு கலெக்டர் சதீஷ் பதிலளித்து பேசுகையில், ஜெர்தலாவ் ஏரி பாசன திட்டம் சுமார் ஒரு கி.மீ., தொலைவிற்க நிலுவையில் உள்ளது.

நிலம் எடுப்பதில் வழக்கு உள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் எடை போட பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942 மி.மீ ஆகும். இந்த ஆண்டு மே 2025 வரை 238.60 மி.மீ மழை பெய்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2025-2026ம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள் உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 1,360 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ கவிதா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை டிஆர்ஓ ரவி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.