மும்பை: மும்பையில் நடந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியான நஹூரில் உள்ள நாலந்தா புத்த விகார் மண்டபத்தில் திருமண விழா ஒன்று வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சுமார் 400 முதல் 500 விருந்தினர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
விழா விருந்தில் கடைசி வரிசையில் பரிமாறப்பட்ட ‘கர்வஸ்’ என்ற பால் இனிப்பு வகையை சேர்ந்த ‘பால்கோவா’ சாப்பிட்ட பலருக்கு திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் உண்டானது. இதில் உணவு விஷமானதால் சுமார் 100 பேர் அடுத்தடுத்து கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் முலுண்ட் பகுதியில் உள்ள அகர்வால் மருத்துவமனையிலும், 4 குழந்தைகள் காம்கார் மருத்துவமனையிலும், 5 பேர் விக்ரோலி மருத்துவமனையிலும் அவசர சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 என தெரிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து நோயாளிகளின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் விழா மண்டபத்திற்கு நேரில் சென்று சந்தேகத்திற்குரிய உணவு மாதிரிகளை சோதனைக்காக சேகரித்தனர். பொதுமக்களின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சிய சம்பவம் தொடர்பாக பண்டூப் போலீசார் உணவு சப்ளை செய்த கான்ட்ராக்டர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


