சென்னை: நெசவாளர்களின் பிரச்சினைகளை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று இன்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழராகவும், இந்தியராகவும் நாம் கதர் ஆடையை அணிவது நமது பெருமையாகும். சுதேசி இயக்கத்தின் மூலம் அந்நிய ஆடைகளைப் புறக்கணித்து, “வெள்ளையனே வெளியேறு” என்ற சுதந்திரப் போராட்ட உணர்வை மக்களிடம் கொண்டு சென்றதில் கதர் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. மகாத்மா காந்தியடிகள் கதர் உற்பத்தியை ஊக்குவித்ததன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் கதர் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது.
விவசாயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவம் நெசவாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல விவசாயமும் நெசவும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியமானவை.
நெசவுத் தொழில் சிறப்பாக செயல்பட்டால்தான் இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். காஞ்சிபுரம், ஆரணி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நெசவுத் தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கெனவே நெய்து தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களையே அரசு முழுமையாக கொள்முதல் செய்யாத சூழலில், புதிய ஆடைகளை நெய்வது நெசவாளர்களுக்கு கடினமாக உள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய கையிருப்பு ஆடைகளை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கினால், பொதுமக்களும் நெசவாளர்களும் பயனடைந்து மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலும், 50, 60 மற்றும் 70 வயதைக் கடந்த நெசவாளர்களில் பலருக்கு கண் பார்வைக் குறைபாடு ஏற்படுவதால், புதிய ஆடைகளை நெய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து பகுதிகளிலும் கண் மருத்துவ முகாம்கள் மற்றும் கண் மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க வேண்டும் என்னும் அவையில் கோரிக்கை விடுக்கப்பட்டது என பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



