இன்றைய நவீன காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பலருக்கும் தொழிலில் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பெற்றோர்களின் மனதை தேவைகளை அறிந்து புதிய சிந்தனையுடன் இத்தொழிலை கையிலெடுத்திருக்கிறார் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் மீனாட்சி. இல்லத்தரசிகள் வேலைக்கு செல்லும் பெண்கள், ஏதேனும் தொழில்துறையில் ஈடுபட்டு வரும் பெண்கள் என பலருக்கும் சவாலாக இருப்பது தினமும் பள்ளி செல்லும் நம் வீட்டு குழந்தைகளுக்கு சத்தான மதிய நேரத்து உணவை தயாரித்து தர வேண்டுமே என்பது தான். அதனை மனதில் கொண்டு நமது சிரமத்தை கொஞ்சம் குறைக்க முயல்கிறார் ஒருவர் என்பது நல்ல செய்தி தானே.
எந்த வயதிலும் தங்களால் சாதிக்க இயலும் என்று சொந்தமாக தொழிலை தொடங்கி அதில் இருக்கும் பல்வேறு தடைகள் மற்றும் கடும் சவால்களை கடந்து தொழிலில் தங்களுக்கென ஒரு தனித்த இடத்தை பெற முயல்கிறார்கள் இன்றைய பெண்கள். அந்த வரிசையில் இளம் தொழில்முனைவோராக இன்றைய மாடர்ன் உலகின் தேவைகளை உணர்ந்து குழந்தைகளுக்கான உலகத்தினை புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை உணர்ந்து உணவுத் தேவையை பூர்த்தி செய்ய களம் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார் மீனாட்சி. இவர் வேலைக்கு செல்லும் பெண்களின் சுமையை குறைப்பதும் எங்களது எண்ணங்களில் முக்கியமானது என்கிறார். சென்னை தியாகராயநகர் பகுதியில் கிளவுட் கிச்சன் துவங்கி சுத்தமான தரமான ஆரோக்கியமான உணவு வகைகளை செய்து சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு டெலிவரி செய்து தருகிறார். இவரது லன்ச் பவுல் சென்னை முழுவதும் பிரபலமான ஒன்று.
இவரது நீண்ட கால அனுபவத்தில் அலுவலகம் மற்றும் தொழிலுக்கான வேலைப்பளு அதிகரிக்கும் இன்றைய சூழலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவுத்தேவைகள் குறித்து பேசுகிறார் மீனாட்சி.
நான் பல ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியிலிருந்த காலகட்டத்தில், எனது குழந்தைகளின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற மிகவும் சிரமப்பட்டேன். அதே போல பணி காரணமாக அடிக்கடி வெளியூர் பயணங்களும் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தது. அந்த கால கட்டத்தில் யாராவது உணவு தயாரித்து கொடுத்தால் நன்றாக இருக்குமே என பலநாட்கள் தோன்றியது. தொடர்ந்த ஹோட்டல் உணவுகள் எனது குழந்தைகளுக்கு ஏற்றதாக இல்லை என்கிற பிரச்னைகளும் இருந்தது. அதன் காரணமாக நீண்ட நாட்களாக குழந்தைகளுக்கான லன்ச் பவுல் தயாரித்து அனுப்பினால் என்ன என்கிற எண்ணங்கள் ஏற்பட்டதின் காரணமாக இந்த கிளவுட் கிச்சன் ஒன்றினை உருவாக்கி நடத்தி வருகிறேன்.
இதற்கென பல வருடங்களாக தொடர்ந்து ஆராய்ந்து குழந்தைகளுக்கான சிறந்த உணவுகளை தயாரிக்கவே பல்வேறு ஆயத்தங்களை மேற்கொண்டோம். இதற்கென தகுதிவாய்ந்த ஸ்பெஷல் செஃப்களை கொண்டு வந்து உணவுகளை தயாரித்து அளிக்கிறோம். இந்த உணவுகளை பேக் செய்யும் முறையில் கூட நிறைய ஆராய்ச்சி செய்து பின்னர் பல்வேறு இடங்களில் ஆர்டர் செய்து வரவழைத்து பரிசோதித்து பார்த்தோம். தற்போது அதில் சிறந்ததாக இருந்த ஒன்றை தேர்வு செய்து குஜராத்திலிருந்து பேக்கிங் பொருட்களை வரவழைத்து பயன்படுத்தி வருகிறோம். இது விலை கொஞ்சம் அதிகம் தான் இருப்பினும் குழந்தைகளுக்கான உணவுகளை எப்போதுமே பொறுப்புடன் கையாளவேண்டும் என்கிற எண்ணங்களே அதனை வாங்கி பயன்படுத்த முக்கிய காரணம். கரும்பு சக்கைகளால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அந்த பேக்கிங் பெட்டிகளில் எங்களது ஆரோக்கியமான தரமான உணவுகளை பிரெஷ்ஷாக தயாரித்து சூடாக அனுப்பி வைக்கிறோம். இதனை குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள்.
குழந்தைகளுக்கான உணவுகளில் நிறைய வெரைட்டி காண்பித்து விதவிதமாக தயாரித்து அளிக்கிறோம். தமிழக உணவுகள், இந்திய உணவுகள், கான்டினென்டல் உணவுகள் என வெரைட்டியான உணவுகள் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனை சுவையான ஆரோக்கியமாக அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் தானே.
அதே போன்று தரத்துடன் ஆரோக்கியத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல செக்கில் ஆட்டிய எண்ணெய்கள், தரமான மளிகைப் பொருட்களை பயன்படுத்தி செய்வதால் உணவுகள் கூடுதல் சுவையுடன் மிளிர்கிறது. எங்களிடம் ஒரு நாள் வாங்கிய வாடிக்கையாளர்கள் அடிக்கடி வாங்க இதுவே காரணம். மாதம் முழுவதும் வாங்குபவரும் இருக்கிறார்கள். எப்பொழுதாவது தேவையென்றாலும் அனுப்பி வைக்கிறோம். ஊருக்கு செல்பவர்கள் ஊரிலிருந்து திரும்பும் வரை லன்ச் பவுல் தயாரித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். எங்களது சேவையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பயன் பெறுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் உணவுகள் குறித்த கவலைகள் ஏதுமில்லாமல் தங்கள் அலுவலக பணிகளையும் தொழில்துறை சார்ந்த பணிகளையும் நிம்மதியாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார்கள். மாறி வரும் சூழலுக்கேற்ப ஒவ்வொருவரின் தேவைகள் மாறுபடுகிறது. அதற்கேற்ப நமது நவீன தொழில்களை உருவாக்கி நாம் முயற்சிகள் மேற்கொண்டு செய்தால் வெற்றி நம் வசமாகிறது.
முதலில் குழந்தைகளுக்கு தான் துவங்கினோம் . தற்போது வயதானவர்களும் அவர்களது ஆரோக்கியமான உணவு தேவைகளுக்காக எங்களிடம் உணவுகளை அனுப்ப சொல்கிறார்கள். அவர்களின் தேவைகளை அறிந்து தயாரித்து அனுப்பி தருகிறோம். அதே போல் கல்லூரி மாணவிகள், அலுவலகம் செல்லும் இளம் பெண்கள் என பலரின் உணவு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ஒரு முறை வாங்கி பயன்படுத்தியவர் அதன் சுவை மற்றும் தரம் காரணமாக உணவுகளை தொடர்ந்து ஆர்டர் செய்கிறார்கள் என்பதே எங்களது உழைப்பிற்கான அங்கீகாரம் தான்.
இந்த உணவுகளை சுத்தமாக ஆரோக்கியமாக தயாரிப்பதோடு சுவை குன்றாமல் குறித்த நேரத்தில் அனுப்பி வைப்பதும் எங்களது முக்கியமான பணி. எங்களது டெலிவரி பார்ட்னர் மூலமாக பள்ளிகளுக்கோ வீடுகளுக்கோ அலுவலகங்களுக்கோ சரியான நேரத்தில் அனுப்பி வைப்பதும் எங்களது சிறப்பம்சம். தற்போது சென்னை முழுவதும் அனுப்பி வருகிறோம்.
எத்தனை சிரமங்கள் இருந்தாலும் நாங்கள் தரத்தில் ஆரோக்கியத்தில் எந்த காம்பிரமைஸ் செய்து கொள்வதில்லை என்பது தான் எங்களது தாரக மந்திரமாக நினைக்கிறோம். அதுவே எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்களை பெற்று தருகிறது. வாடிக்கையாளர்கள் நண்பர்கள் போன்றோரது வாய்மொழி விளம்பரங்கள் மூலமாகவே எங்களது தொழில் இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதை தக்கவைத்துக்கொள்ளவே சிறப்பானதொரு தரத்தினை உறுதி செய்கிறோம்.
நான் கார்ப்பரேட் பணியிலிருந்த காலத்திலிருந்து இன்றுவரை என வேலை தொழில் என அனைத்து விஷயங்களுக்கு கூடவே இருப்பது எனது கணவர் ரமேஷ் தான். அவரது பிஸியான தொழில் பணிகளுக்கிடையே எனது தொழிலுக்கான பல்வேறு சிரமங்களை பகிர்ந்து கொண்டு கூடவே பயணிக்கிறார் என்பது தான் எனது வெற்றிக்கு காரணங்கள். நான் அலுவலக பணியினை துறந்து விட்டு தொழிலில் இறங்கிய காலத்திலும் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கிறார். எதிர்காலத்தில் இதனை இன்னமும் மேம்படுத்தும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. அதனை ஒவ்வொன்றாக நடைமுறை படுத்த வேண்டும்.
இன்றைய நவீன காலகட்டத்தில் எல்லா பெண்களும் ஏதேனும் துறைகளில் சாதனை படைக்க விரும்புகிறார்கள். தங்களுக்கென தனித்துவமிக்க அடையாளங்களை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இருக்கும் பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கைகள் பெருமளவு அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான பேஷனை நோக்கி தொடர்ந்து பயணித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார் இளம் தொழில் முனைவோர் மீனாட்சி ரமேஷ்.
- தனுஜா ஜெயராமன்.
