Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வயநாட்டில் 3 தொழிலாளர்கள் பலி மண்ணுக்குள் புதைந்த 5 பேரை தேடும் பணி தீவிரம்: மண் சரிவு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: வயநாடு மேப்பாடியில் சுரங்கப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி 3 வெளிமாநில தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறினார். மண்ணுக்கடியில் புதைந்த மேலும் 5 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி என்ற இடத்திலிருந்து ஆனக்காம்பொயில் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொங்கன் ரயில்வே நிறுவனம் சுரங்கப் பாதைக்கான பணிகளை நடத்தி வருகிறது. பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சுரங்கப்பாதைக்காக மலையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண் அங்கு பல்வேறு இடங்களில் குன்றுகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கொங்கன் நிறுவனத்திற்கு வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீ உத்தரவிட்டிருந்தார். மேலும் மழை ஓயும் வரை பணிகளை நிறுத்தி வைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த நிறுவனம் அதை கண்டு கொள்ளாமல் பணிகளை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து வந்தது. இதில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணும் அடித்துச் செல்லப்பட்டது.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேரம் நடந்த தேடுதல் வேட்டையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரபான் பல், பீகார் மாநிலத்தைச் சார்ந்த பிகாஸ் குமார் சிங் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்மோல் ஆகிய 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கொங்கன் நிறுவனத்தின் மேலாளர் விக்ரம் ராணா, பொறியாளர் ராகுல், பீகார் மாநிலத்தை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் முகம்மது இம்ரான், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சர்வேயர் ராகேஷ் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சர்வேயர் அசருதீன் அன்சாரி ஆகிய 5 பேரை காணவில்லை என்று கட்டுமான நிறுவனம் அறிவித்தது.

இவர்களைத் தேடும் பணி நேற்று 2வது நாளாக நடைபெற்றது. இப்பணியில் 4 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. தேடும் பணியில் போலீஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட 47 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் அருகிலுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலியான 3 தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரள முதல்வர் வி.டி. சதீசன் நேற்று மண்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். இதன் பின்னர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை வெற்றி வருபவர்களையும் அவர் சந்தித்தார். கேரள முதல்வர் வி.டி சதீசன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வயநாட்டில் மண்சரிவில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.

இந்த சம்பவம் குறித்து இரட்டை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்டது குறித்தும், சுரங்கப்பாதை அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கொடுத்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.