Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்: பெங்களூரு குடிநீர் வாரியம் அதிரடி உத்தரவு!

பெங்களூரு: பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (BWSSB) கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குடிநீரை வீணாக்குவதைத் தடுத்து, சிக்கனமாகப் பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூரு நகரம் சந்தித்த கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்திய அறிவியல் கழகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 'எல் நினோ' (El Nino) தாக்கம் காரணமாகப் பருவமழை குறைந்ததே இந்த நீர் பற்றாக்குறைக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய விதிகளின்படி, பெங்களூருவில் உள்ள அனைத்து வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள குழாய்களில் 'ஏரேட்டர்கள்' அல்லது தண்ணீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரின் வேகம் குறையாமல், 30 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.

மேலும், குடிநீரைப் பயன்படுத்தி வாகனங்களைக் கழுவவோ, தோட்டம் வளர்க்கவோ, சாலை மற்றும் நடைபாதைகளைச் சுத்தம் செய்யவோ அல்லது கட்டிடக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது எனத் திட்டவட்டமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட மறுசுழற்சி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல், அரசு மற்றும் தனியார் நீச்சல் குளங்களை நிரப்பக் குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்குப் பதிலாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் அல்லது இதர மாற்று நீர் ஆதாரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளைப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாரியம் எச்சரித்துள்ளது. விதிகளை முதன்முறை மீறுபவர்களுக்கும், ஏரேட்டர்களைப் பொருத்தத் தவறுபவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த தடையை மீறித் தொடர்ந்து குடிநீரை வீணடித்தால், தினமும் கூடுதலாக ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். இதுமட்டுமன்றி, சம்பந்தப்பட்ட இடங்களுக்கான குடிநீர் விநியோகம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.