Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பிரதான குழாய் இணைப்பு பணி காரணமாக 5 மண்டலங்களில் 14ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்

சென்னை: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பிரதான குழாய் இணைக்கும் பணி காரணமாக 5 மண்டலங்களில் நாளை மறுநாள் (14ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் நாளை மறுநாள் (14ம் தேதி) காலை 10 மணி முதல் 15ம் தேதி காலை 10 மணி (24 மணி நேரம்) மண்டலம் 5, 6, 8, 9 மற்றும் 10க்குட்பட்ட கீழ்கண்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராயபுரம் மண்டலத்தில் புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணாநகர் மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், தேனாம்பேட்டை மண்டலத்தில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மண்டலத்தில் தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.