Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் இன்று முதல்வர் தண்ணீர் திறப்பு: கடைமடைக்கு வந்து சேருமா? விவசாயிகள் சந்தேகம்

சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததால், கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 9,035 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 11,501 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 2,000 கனஅடி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 90.47 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 91.15 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 53.97 டி.எம்சியாக உள்ளது. இதையடுத்து 80 நாட்களுக்கு பிறகு இன்று (1ம் தேதி) காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறார். இதற்காக அவர், காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் மேட்டூர் அணைக்கு பகல் 12 மணிக்கு வருகிறார். மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விசையை இயக்கி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர், சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். துவக்கத்தில் 3,000 அல்லது 5,000 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விநாடிக்கு 15,000 கனஅடி வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தொடர்ந்து 45 நாட்களுக்கு, தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் வருகையையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடைமடை வரை சென்றடைய குறைந்தபட்சம் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி அளவாவது தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்படும். கல்லணைக்கு வந்து சேருவதற்கே குறைந்தது 4 நாட்கள் ஆகும். அங்கு கிடைக்கும் நீரின் அளவு 4 ஆயிரம் கனஅடி என்ற அளவிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர மேலும் 10 நாட்களுக்கு மேலாகும். எனவே மேட்டூர் அணையை இப்போது திறப்பதற்கு பதிலாக 100 அடியை தாண்டிய பிறகு திறந்தால் நல்லது என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.