Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தண்ணீரின்றி டெல்டாவில் குறுவை சாகுபடி அடியோடு பாதிப்பு; 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் கேள்விக்குறி: கண்ணீரில் விவசாயிகள்: கண்டுகொள்ளாத தவெக அரசு

தமிழகத்தில் நெற்களஞ்சியமாக மட்டுமில்லாமல் உணவு ஆதாரமாக டெல்டா மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி முப்போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஒரு சில பகுதிகளில் பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை சாகுபடியும் மேற்கொள்வார்கள். காவிரி டெல்டாவின் நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.

அணை திறக்கப்பட்டதும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு உரிய தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரிநீர் கிடைக்காத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் வேறு வழியின்றி ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.

மேலும், மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்படும் அவல நிலை உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக இருந்து வருகிறது. ஆனால், தமிழக அரசு மவுனமாக இருந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் வேறு வழியின்றி தமிழகத்துக்கு காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறைந்த அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், டெல்டாவிற்கு விவசாயம் செய்யும் அளவுக்கு நீர் வரத்து வரும் என்பது கேள்விக்குறி தான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விவசாயம் செழித்தது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் குறித்த நேரத்தில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கியமாக, கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

ஒவ்வொரு முறையும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேட்டூர் சென்று தண்ணீர் திறந்து விடுவார். ஒரு சில ஆண்டுகளில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.96 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டு 1.97 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. திருவாரூரில் 1.77 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டு 1.93 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டு 75,250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 98,850 ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டு 99,250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறப்பு மற்றும் போதிய மழையின் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து அதிக மகசூலை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீரும் இல்லை, போதிய மழையும் இல்லை. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது.

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1.40 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் சுமார் 60,000 ஏக்கரிலும், நாகப்பட்டினத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறையில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரிலும் தான் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் நடைபெற்ற குறுவை சாகுபடி இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் தான் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் பம்பு செட் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளே சாகுபடி செய்யலாமா வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி என்று இலக்கும் குறைக்கப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரம் ஏக்கரிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கரிலும் என ஏறக்குறைய 3.44 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சாகுபடி பரப்பளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பயிர்கள் அனைத்துக்கும் ஆழ்குழாய் தண்ணீர் மூலமே பாசனம் செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடியே அடியோடு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டம் முழுவதும் மொத்தமாக சுமார் 9.76 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.07 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 3.46 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.56 லட்சம் ஏக்கரிலும் சம்பா சாகுபடி நடைபெற்றது. அதேபோல் இலக்கை தாண்டி கொள்முதலும் செய்யப்பட்டு அதிக மகசூல் கிடைத்தது.  கடந்த ஆண்டு 6 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

சம்பா சாகுபடி பணிகள் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி அதற்கான அறுவடை பணிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். இயல்பாகவே அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும். மழை நீர் மற்றும் ஆற்று நீரை பயன்படுத்தி சம்பா விதை விதைக்க தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே போதுமான அளவிற்கு மழை பெய்யவில்லை. காவிரியில் தண்ணீரும் திறக்கவில்லை.

பம்பு செட் மட்டுமே நம்பி சம்பா சாகுபடியில் இறங்க முடியாது. மழைநீர் மற்றும் ஆற்றுப் பாசனம் ஆகிய இரண்டும் சரியான முறையில் இருந்தால் மட்டுமே சாகுபடியை தொடங்கலாம். இந்த ஆண்டு குறுவை சாகுபடியே குளறுபடியாக இருக்கும் தருணத்தில் சம்பா சாகுபடி பணியை தொடங்குவோமா அல்லது மாற்று தொழிலுக்கு செல்வோமா என விவசாயிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.

* கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டம் முழுவதும் மொத்தமாக சுமார் 9.76 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.

* கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட தாமதமாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மேட்டூர் சென்று தண்ணீர் திறந்து விடுவார். ஒரு சில ஆண்டுகளில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

* வறட்சி நிவாரண நிதி ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க கோரிக்கை

‘‘குறுவை நெல் சாகுபடி என்பது 90 முதல் 120 நாட்களுக்குள் குறுகிய காலத்தில் பலனை அடையக்கூடிய பயிர் ஆகும்.. எனவே இதில் பெரும்பாலான விவசாயிகள் மும்முரமாக செயல்படுவார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக குறித்த காலங்களில் திறந்துவிடப்பட்டது.அதோடு, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், உணவு பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவும் குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தையும் அரசு செயல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். எந்திர நடவை ஊக்கப்படுத்தும் வகையில் நடவுக்கு பின்னர் மானியம் வழங்கப்படும். குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் வழங்கப்படும். ஆனால் மேட்டூரில் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால், பம்புசெட் போன்ற நிலத்தடி நீராதாரம் மூலம் மட்டுமே குறைவான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட வேண்டியதாகிவிடும். இதனால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதார நிலை கேள்விக்குரியதாகி விடும்.

அந்த நிலை இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து இதுவரை கிடைக்கவில்லை. எனவே உரிய காலத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்படவில்லை. இதனால் கடந்த ஜூன் மாதமே தொடங்கி இருக்க வேண்டிய குறுவை சாகுபடி தற்போது முழு அளவில் தொடங்காத நிலையில் உள்ளது. சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது. எனவே குறுவை சாகுபடியில் எதிர்பார்க்கப்படும் இலக்கை எட்ட முடியுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது. குறுவை சாகுபடியை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய வாழ்வாதார பிரச்னையை இது ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட வேண்டியது அவசியம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடி விவசாயிகள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. பல வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். எனவே விவசாயிகளை கருத்தில் கொண்டு குறுவை வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

* காவிரிநீர் கிடைக்காத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் வேறு வழியின்றி ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கரில் நடைபெற்ற குறுவை சாகுபடி இந்த ஆண்டு 3 லட்சம் ஏக்கரில் தான் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.