Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மருத்துவ முகாம்கள், குடிநீர் விநியோகம் : இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி ஏற்பாடுகள் என்னென்ன?

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 10) இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 30 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் பொதுமக்களின் உடனடி வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பேரணியல் கலந்துகொள்ளும் பொதுமக்களும், தங்களுக்குத் தேவையான குடிநீர் கொண்டுவருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் எதிராக வீரத்துடன் போர்புரிந்துவரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமை உணர்வையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் கடற்கரைச் சாலையில் பேரணி நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார்கள்.

அந்த அறிவிப்பின்படி, இன்று (மே 10) மாலை 5 மணிக்கு சென்னை கடற்கரை சாலையில் காவல்துறை இயக்குநர் அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்டு தீவுத்திடல் அருகே போர் நினைவுச் சின்னம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறவுள்ளது.

இப்பேரணிக்கு வருகை தரவுள்ள பொதுமக்களின் தேவைகளுக்காகப் பல்வேறு சிறப்பு வசதிகளைச் செய்துதர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பின்வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிழற் கூடாரங்கள்: வெயில் தாக்கத்திற்காக பேரணி நடைபெறும் 200 இடங்களில் அரேபியன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கழிப்பறை வசதிகள்: நடமாடும் கழிப்பறைகள் 1 இடத்திற்கு 5 இருக்கைகள் என மொத்தம் 10 இடங்களில் 50 இருக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 இடங்களில் She Toilet அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் விநியோகம்: பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 30 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ முகாம்கள்: பேரணி நடைபெறும் 10 இடங்களில் மருத்துவக் குழுக்களுடன் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேவையான குடிநீர் வசதிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஒரு முகாமுக்கு 3000 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் என மொத்தம் 30,000 ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கால்நடை மருத்துவப் பிரிவின் மூலம், பேரணி நடைபெறும் இடங்களில் நாய்கள் மற்றும் மாடுகளின் இடையூறுகள் ஏற்படாத வகையில் இல்லாத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.