பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் துருப்பிடித்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
ஊத்துக்கோட்டை, நவ.14: பெரியபாளையம் காவலர் குடியிருப்பில் பறிமுதல் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இவற்றை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெரியபாளையம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் தாய் கிராமம், குக்கிராமங்கள் என 73 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட தற்போது 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள், லாரி, டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களை பறிமுதல் செய்து, பிடிபட்ட வாகனங்கள் பெரியபாளையம்-புதுவாயல் சாலையில் உள்ள பெரியபாளையம் காவல் நிலையத்தின் காவலர் குடியிருப்பு ராள்ளபாடி பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருப்பிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. இதனால், குடியிருப்புகளில் விஷப்பூச்சிகள் உலா வருவதால் அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பல நாட்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வரும் இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் அல்லது இந்த வாகனங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.