Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் ஒயிலாய் வென்ற லெய்லா: பைனலில் இன்று அன்னாவுடன் மோதல்

வாஷிங்டன்: வாஷிங்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, கனடா வீராங்கனை லெய்லா அன்னி ஃபெர்னான்டஸ் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டி ஒன்றில் ரஷ்ய வீராங்கனை அன்னா நிகோலயெவ்னா காலின்ஸ்கயா (26), பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு (22) மோதினர்.

துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடிய அன்னா, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை லெய்லா அன்னி ஃபெர்னான்டஸ் (22), ரஷ்யாவில் பிறந்து கஜகஸ்தானுக்காக ஆடி வரும் எலெனா ரைபாகினா (26) மோதினர். இரு வீராங்கனைகளும் சம பலத்துடன் மோதியதால் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக காணப்பட்டது.

முதல் செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் ரைபாகினா கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய லெய்லா, 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் டைபிரேக்கரில் 2வது செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 3வது செட்டும் டைபிரேக்கர் வரை சென்றது. அந்த செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய லெய்லா போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் லெய்லா - அன்னா காலின்ஸ்கயா மோதவுள்ளனர்.